பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வட ஆற்காடு மனுவலில் ஆசிரியர் ஸ்டூவர்ட் குறிப்பிட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்ட கிழக்குப் பகுதியில் லெப்பைகள் நெசவிலும் விவசாயத்திலும் மிகுந்து இருப்பதாக இராமநாதபுரம் மானுவலில் வரையப்பட்டுள்ளது.[1] சித்தார்கோட்டை, எக்ககுடி, பனைக்குளம், பேரையூர், கமுதி, அபிராமம் ஆகிய ஊர்களில் அவர்கள் முன்னர் நெசவில் ஈடுபட்டிருந்ததைக் குறிக்கும் "பாவோடி"கள் இன்றும் உள்ளன. மேலும் அருப்புக் கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி முஸ்லிம்கள் நெசவில் மிகுதியாக தொடர்ந்து ஈடுபட்டிருப்பது இந்த கூற்றினைத் வலியுறுத்துவதாக உள்ளது.

மற்றும் "நயினார்" "முதலியார்" விகுதிகளையுடைய இஸ்லாமியப் பெயர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும் "தரகனார்" என்ற சொல் குமரி மாவட்டத்திலும் “அம்பலம்”, "சேர்வை" விகுதிகளையுடைய இஸ்லாமியப் பெயர்கள், இராமநாதபுரம், பசும்பொன், மதுரை மாவட்டங்களிலும் இன்றளவும் வழக்கில் உள்ளன. பசும்பொன் மாவட்டத்தில் திருப்பத்தூர், இளையாங்குடி, இராமநாதபுரம் மாவட்டத்தில் ராஜ சிங்கமங்கலம், இராமநாதபுரம், கீழக்கரை, பெரியபட்டினம், மண்டபம், தொண்டி ஆகிய ஊர்களிலும் மதுரை மாவட்டத்தில், திண்டுக்கல், பழநி, வெத்திலைக்குண்டு ஆகிய ஊர்களிலும் "அம்பலம்" என்ற சொல் இஸ்லாமியப் பெயர்களுடன் இணைந்து ஒலிக்கின்றன. மற்றும் மதுரை, மேலூர் பகுதிகளில் "நாட்டாண்மை" என்ற பெயர் வழக்கில் உள்ளது. இராமநாதபுரம் சேது மன்னரின் சேவையில் சிறந்து பணியாற்றிய அபிராமம் நூர்முகம்மது என்பவருக்கு சேதுபதி மன்னர் சிறப்புகள் செய்து கௌரவித்ததுடன் "விஜயன் அம்பலம்" என்ற விருதுப் பெயரையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருநூறு ஆண்டுகளாகின்றன. அவரது வழி வந்த வள்ளல் ஒருவரை பாட்டுடைத்தலைவராகக் கொண்டு மதுரை தமிழ்ச் சங்கப் புலவரான சோதுகுடி அப்துல்காதர் ராவுத்தர் என்பவர் "அகப்பொருள் கோவை" ஒன்றைப்பாடி உள்ளார்.[2]


  1. Rajaram Rao - T. Manual of Ramnad Samasthanam(1898) p. 49.
  2. சோதுகுடி அப்துல் காதிர் ராவுத்தர்-விஜயன், அப்துல் ரஹ்மான் அகப்பொருட் பல்துறைக்கோவை (ரங்கூன் 1911)