பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

மற்றும். பரமக்குடி, முதுகுளத்தூர் வட்டாரங்களில் இஸ்லாமியர் சிலர் தங்கள் பெயருடன் “சேர்வை” என்ற சொல்லையும் இணைத்துப் பயன்படுத்துகின்றனர். மொத்தத்தில் “அம்பலம்” “சேர்வை” என்ற இரு சொற்களும் அந்தந்த ஊர்களில் சமூகத் தலைவர் என்ற பொருளில் தான் பிரயோகிக்கப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் ஏனைய இந்து சமூகத் தலைவரைப் போன்று இஸ்லாமியத் சமூகத் தலைவரும் "நாட்டாண்மை" என வழங்கப்படுகின்றனர். இந்தச் சொற்களின் வழக்கு பற்றி சற்று தீவிரமாகச் சிந்தித்தால், இந்தத் தமிழ் மண்ணில் இஸ்லாம் எவ்வளவு ஆழமாக வலுவாக, வேர் பரந்துள்ளது என்பது விளங்கும். தமிழ்நாட்டில், முதன்முதலில் இராமநாதபுரம், நெல்லை, மதுரை மாவட்டங்களில் அராபியரது பூர்வ குடியேற்றங்கள் ஏற்பட்டதால், அந்த இஸ்லாமியர்கள், அங்குள்ள மக்களுடன் நாளடைவில் நெருக்கமான தொடர்பும் தோழமையும், உறவும் கொண்டு, தமிழ்ச் சமூக அமைப்பில் உறுதியாக ஊடுருவி, இணைந்து இன்றளவும் நிற்பதுவே இத்தகைய அரபு தமிழ்ப் பெயர்கள் இணைப்பிற்கு காரணம் என்பதும் புரியும் கடந்த சில நூற்றாண்டுகளில், அரசியல், பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக போர்ச்சுக்கீசியர், டக்சுக்காரர் ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், போன்ற பிற நாட்டவர் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். தமிழ்ச் சமுதாயத்தில் கலந்தும் இருக்கின்றனர். ஆனால், அரபுநாட்டு இஸ்லாமியர்களைப் போன்று, இந்த மண்ணின் மாட்சியை, பாரம்பரிய விழுதுகளை என்றென்றும் வலுவாகப் பற்றி நிற்கும் பெற்றி, பண்பாடு, உள்ளப்பாங்கு அவர்களுக்கு அமையவில்லை என்பது வரலாறு உணர்த்தும் உவமையாகும்.