பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

712ல்) தொடர்ந்து தில்லியில் கஜினிமுகம்மது, அடிமை வம்சத்தினர், கில்ஜிகள், துக்ளக், முகலாயர், பாமனி சுல்தான்கள் என பல்வேறு இஸ்லாமிய மன்னர்களது ஆட்சி, பல நூற்றாண்டு கால இந்திய வரலாற்றுக்குள் இடம் பெற்றுள்ளது. ஆனால், இறுதியாக முகலாய மன்னரான அவுரங்க ஜேப்பின் தென்னிந்திய படையெடுப்பின் பொழுதும் அதனைத் தொடர்ந்து அவரது அரசப் பிரதிநிதிகளான நிஜாம், நவாப்களின் காலத்தில் வடக்கே வாழ்ந்த இவர்களில் ஒரு பகுதியினர் தமிழகத்திற்கு வந்து நிலையாகத் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பெரும்பாலும் அரசுப்பணி (போர்ப்பணி)யை மேற்கொண்டிருந்த அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு அதிகமாக நீடித்த செஞ்சிப் போர் போன்று (கி பி. 1689–1697) பல போர்கள், அரசிறை வசூல் போன்ற காரணங்களினால்-தமிழகத்தில் நிலைத்து, நாளடைவில் இந்த சமுதாயத்தில் கலந்து விட்டனர். அன்று இந்திய அரசின் ஆட்சி மொழியாக இருந்த பார்ஸி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளின் கலப்பினால் தோன்றிய உருது மொழியை அவர்கள் தாய் மொழியாகக் கொண்டிருந்த போழ்தும், தமிழக மக்களின் பொது மொழியான தமிழை விழைந்து கற்கவும், தமிழில் புலமை பெறவும் அவர்கள் தயங்கவில்லை.

அவர்களின் வழியினர் இன்றும் செங்கல்பட்டு, வடஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, இராமநாதபுரம், மாவட்டங்களில் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர். இவர்களைப் பட்டாணியர் என்றும் தக்கனிகள் என்றும் பிற்கால இலக்கியங்களிலும் வழக்கிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக "சீதக்காதி நொண்டி நாடகம்" "இராமப்பையன் அம்மானை" ஆகிய நூல்களில் பட்டாணியர் என்ற சொல் பலயிடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழக இஸ்லாமியரின் ஒரு பிரிவினரைக் குறிக்க இந்த சொல்லைப் பயன்படுத்தி இருப்பது பொருத்தமற்றதாகும். காரணம் முந்தைய இந்தியாவின் (தற்பொழுது பாகிஸ்தான்) வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் புஷ்த்து மொழி பேசும் இந்து முஸ்லீம் இரு சமயத்தவரை குறிப்பது பதான் (Pathan) என்ற இனச் சொல்[1]. அந்த "பதான்” என்ற சொல்லின் திரிபுதான் பட்டாணி என்பதாகும். உடல் வாகிலும், செயல் திறத்திலும் சிறந்


  1. Oxford English Dictionary (1944) p. 581