பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தாழ்த்த தயங்கவில்லை. ஏக இறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அண்ணல் நபி நாயகம் (ஸல்) அரபி மக்களிடம் போதித்த போதனைகளையும், எய்திய சாதனைகளையும் அவர்கள் எடுத்துக்காட்டி, தமிழ் மக்கள் உலகம் தழுவிய அந்த ஒற்றுமை அணியில் சேர்ந்து, இம்மை மறுமைக்கான இனிய பணிகளில் ஈடுபட வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது இனிய பேச்சும் இறைக்கொள்கை விளக்கங்களும், ஏழை எளியவர்களிடம் ஈடுபாடு கொண்டு செய்த சேவையும், தமிழ் மக்களது சமய வாழ்வில் புதிய உணர்வையும் சிந்தனைத் தெளிவையும் தந்தன. அத்துடன், இடையோடிகள் இல்லாத அவர்களது எளிய இறைவழிபாடும் இனிய நடைமுறைகளும் யாவரையும் கவர்ந்தன. குறிப்பாக நடுத்தர அடித்தள மக்களிடையே விழிப்பை ஏற்படுத்தியது.

இத்தகைய மன மாற்றத்திற்குப் பல காரணங்கள் இருந்தன. அன்றைய தமிழ்ச் சமுதாயம், சமய மோதல்கள், சமயக் காழ்ப்பு, சமூகக் கொடுமைகள், பகுத்தறிவுக் கொவ்வாத பழக்க வழக்கங்கள், உயர்வு தாழ்வு, ஆண்டான் அடிமை நிலைகள் – ஆகியவை விஞ்சி நின்றதாகும். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற பேருண்மை எங்கேயோ மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஒன்றே குலமும், ஒருவனே தேவனும் என்ற உயரிய கொள்கை, உருமாறி பல நூற்றாண்டுகளாகி இருந்தன. இந்நிலையில், இந்து சமயத்தில் சீர்திருத்தம் கோரிய பௌத்தக் கொள்கையை பலவீனமடையச் செய்தது. சமணம் கொல்லாமையை கோடிட்ட அதனை சீர் குலைத்தது சைவம். பழமையையும் பல தெய்வ வணக்கத்தையும் கொண்ட சைவத்தையும் சமாளித்து நின்றது வைணவம். இவையனைத்தும் ஆரிய இனக் கொள்கை என்ற ஒரு தாயின் பிள்ளைகள். தமிழக சமய வாழ்விலும், சமுதாய முன்னேற்றத்திலும் சிறப்பாக எதனையும் சாதித்து விடவில்லை. எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமுதாயத்தின் நிலை இதுவேயாகும். இந்தப் பின்னணியில், அராபிய நாட்டு இறைநேசர்களும் தொண்டர்களும் தூவிய புனித இஸ்லாம் என்ற வித்து, நமது தமிழ் மண்ணில் வேரூன்றி வளர்ந்து தழைத்துப் பூத்தது. அதனுடைய மோகனத் தோற்றத்தையும், மென்மையான சுகந்தத்தையும் கண்டு, உணர்ந்தவர்கள் அதனை வேற்று நாட்டு மலர் என வேறுபாடு கொள்ளவில்லை.