பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

கத்தையும் மக்களிடம் விளக்கும் பிரச்சார நோக்கம் கொண்டது என்பதை காயலில் இருந்த குலசேகர பாண்டியன் புரிந்துகொண்டவுடன் அவர்களது பணி தொடருவதற்கு தடங்கல் எதுவும் ஏற்படுத்தவில்லை. ஆனால் மதுரை, இராமநாதபுரம் பகுதியில் இருந்த பாண்டியர்கள் அவர்களது பணிக்கு இடையூறு செய்தமையும், அதனை எதிர்த்து முறியடித்த போரில் அவர்கள் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த விவரங்களையும் ஸ்ஹாதத் நாமா என்ற பாரசீக நூலை ஆதாரமாகக் கொண்டு வரைய பெற்ற ஹமீது சரிதை தெரிவிக்கிறது. [1]சுல்த்தான் சையது இபுராகீம் (வலி) அவர்கள் பாண்டிய நாட்டில் கிழக்கு கடற்கரையில் அமைந்து இருந்த பவுத்திர மாணிக்கப் பட்டினத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருந்ததால் அவர்களது ஜீவியத்தின் பொழுதே நெல்லை, மதுரை, இராமநாதபுரம் மாவட்ட மக்களின் ஒரு பகுதியினர் இஸ்லாம் மதத்தை ஏற்றனர், அவர்களது சந்ததிகளும் தொண்டர்களும் பாண்டிய நாட்டில் பல பகுதிகளில் சன்மார்க்க சேவையைத் தொடர்ந்தனர். இவர்களது புனிதப்பணியின் காரணமாக பாண்டிய நாட்டில் ஒரு சிறு பிரிவு மக்கட் தொகையினராக முஸ்லிம்கள் வாழ்ந்து வந்ததை மார்க்கோ போலோவின் பயணக்குறிப்புகளில் இருந்து ஊகித்து அறிய முடிகிறது. பாண்டிய மக்களது உணவுப் பழக் கங்களை விவரிக்கும் மார்க்கோபோலோ, அந்த மக்கள் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை நேரடியாக கொன்று தின்பது கிடையாது என்றும் அவைகளின் ஊனைப் பெற்று உண்டனர் என்ற குறிப்பில் இருந்து, முஸ்லிம்கள் பயன்படுத்திய ஹலாலான ஊனை அந்த மக்களும் உண்டனர் என்பது பெறப்படுகிறது.

பன்னிரண்டாவது, பதிமூன்றாவது நூற்றாண்டுகளின் பிற்பகுதியில், பாண்டிய நாட்டு இஸ்லாமியர்களுக்கு அரசியலில் செல்வாக்குடன் அரசினது மத சகிப்பு இருந்ததால் சோழ நாட்டின் தென்பகுதி உட்பட்ட தமிழகத்தில் இஸ்லாம் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலை இருந்தது. அப்பொழுது ஹஸ்ரத் அலியுத்தீன் அவர்களும், ஹாஜி சையித் தாஜுதீன் என்பவரும் மதுரையில் இஸ்லாமிய சேவையில் ஈடுபட்டனர். இவர்கள் யாவர்? இவர்களது பணியின் விவரம் என்ன? என்பன போன்ற

வினாக்ளுக்கு விடை இறுக்கும் வரலாற்று ஆவணங்கள் இல்லை.


  1. முகமது இப்ராஹீம் லெப்பை - ஷஹீது சரிதை(1954)பக்கம் - 138