பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10

அரசியல் முதன்மை


மூவேந்தர்களின் ஆட்சியில் தமிழகத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகர்களுக்கு ஆதரவும் ஊக்குவிப்புகளும் இருந்து வந்தன. கொடுமனம், பந்தர், முசிறி, கொற்கை, புகார் போன்ற பட்டினங்களின் செல்வச் சிறப்பிற்கு ஆதாரமான வணிகத்தை பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை, பத்துப்பாடல் ஆகிய சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. கல்வெட்டுக்களிலும் அந்த வணிகச் சாத்தினர், மணிக்கிராமம், அஞ்சுவண்ணம், நானா தேசிகள், திசையாயிரத்து ஐந்நூற்றுவர், வலஞ்சியர், எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்களது வணிகம் தங்கு தடையின்றி நடைபெற அரசியலார் அவர்களுக்கு எல்லா வித வசதிகளையும் வழங்கியதுடன், அரச அவைகளில், எட்டி, ஏனாதி ஆகிய சிறப்பு விருதுகளையும் வழங்கி அவர்களைப் பெருமைப்படுத்தினர். அதன் காரணமாக வெளிநாட்டு வணிகர்கள் அரசியலில் தீவிர பங்கு கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டது.

இத்தகைய வணிகரில் ஒருவரான துருக்கன் அகமது முதல் ராசராசனது அவைக்களத்தை அலங்கரித்த முக்கியமான இஸ்லாமிய அரசியல் தலைவர் என்பதை ஆனைமங்கலச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.[1] இவரைப் போன்றே கங்கை கொண்ட சோழபுரத்து ராஜராஜ வித்யாதரப் பெருந்தெருவைச் சேர்ந்த சோனகன் சாவூர் முதலாம் ராஜேந்திர சோழனின் திருமந்திர ஓலை நாயகனாக விளங்கியதை கோலார் கல்வெட்டு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், அதே மன்னனது


  1. நடன காசிநாதன் — கல்வெட்டு ஒரு அறிமுகம் (1976) பக்கம் 33