பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

இருபத்து நான்காவது ஆட்சியாண்டைக் குறிக்கும் மன்னார் கோவில் கல்வெட்டு, அந்தப்பெருமகனை "ராஜேந்திர சோழ கந்தர்வப் பேரரையன்" என பெருமிதத்துடன் சுட்டுகிறது.[1] இங்ஙனம் சோழப் பேரரசின் அரசியலில் முதன்மை பெறத் துவங்கிய இஸ்லாமியர் என்ன காரணத்தினாலோ குலோத்துங்கனது ஆட்சியில் வெறுப்பையும் வீழ்ச்சியையும் பெற்றதை சிதம்பரம் கோயில் கல்வெட்டுக்களில் இருந்து ஊகிக்கமுடிகிறது. அந்தக் கோயிலின் திருப்பணிகளைத் திறம்பட நிறைவேற்றிய சோழ சேனாபதி நரலோகவீரனைப் பற்றிய புகழ்ச்சிக் குறிப்புகளில் ஒன்று. அவனது கொல்லம் படையெடுப்பு பற்றியதாகும் இந்த நிகழ்ச்சி குலோத்துங்க சோழனது இருபத்து எட்டாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1996) நிகழ்ந்தது.[2] அன்று வேணாடு என வழங்கப்பட்ட கொல்லம், சோழப்பேரரசின் ஒரு பகுதியா விளங்கியது என்பதும், அங்கு இஸ்லாமியர்கள் அப்பொழுது பெரும் எண்ணிக்கையில் இருந்தனர் என்பதும் தெளிவு. இந்த படையெடுப்பின் காரணத்தை வரலாறு வழங்காவிட்டாலும் அதனால் என்ன விளைவு ஏற்பட்டது என்பதனை அதே கல்வெட்டு கூறுகிறது.[3] "... ... ... பஞ்ச பாண்டியர்களை அடக்கி ஒடுக்கிய புகழ் வாய்ந்த குலோத்துங்கனது பெரும்படை இந்தப்போரில் (கொல்லம்) எதிரிகளை சிதறியோடச் செய்த வெற்றிச் சிறப்பை எதிர்க்கரையில் உள்ள பாரசிகர் நாட்டு இளம் பெண்களும் பரவிப் பாடுவர்." ... ... ... இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கி. பி. 1323 இல் மதுரையில் நிறுவப்பட்ட இஸ்லாமியர் ஆட்சியைக் குறிப்பிடும் மதுரைத் தல வரலாறு "... ... ... கொல்லம் அழிந்து 226 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது சகம் 1246 (கி. பி. 1324) இல் ருத்ரோகரி ஆனி மாதம், பராக்கிரம பாண்டியன், என்பவர் ஆட்சி செலுத்தும் பொழுது நேமி என்று அழைக்கப்பட்ட டில்லி ஆதி சுல்தான் முல்க் நாட்டைக் கைப்பற்றினார் ... ... ..." எனத் தொடர்கிறது.[4]


  1. AR, 12/1905 — (மன்னார் கோயில்)
  2. Nilakanta Sastri K.A - Studies in Chola History and administration
  3. Epigraphica India. vol. v. p. 103
  4. 15. மதுரைத் திருப்பணி மாலை-மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பு (1932)