பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அழகிய தர்காவாக அமைத்து உதவினர்.[1] அத்துடன் அதற்கு அண்மையில் உள்ள தணக்கன் குளம் கிராமமும் இந்த தர்காவின் பராமரிப்பிற்கு தானமாக வழங்கப்பட்டது.

அந்த கால கட்டத்தில், கிழக்கு இராமநாதபுரம் சீமையின் தென்கிழக்குப் பகுதியை ஷஹீது அவர்கள் விக்கிரம பாண்டியனிடமிருந்து கைப்பற்றி தமிழகத்தில் முதன்முறையாக, இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கிணங்க மக்கள் ஆட்சியை நிறுவினார்கள். இந்த ஆட்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை. வடக்கே ஓடிப்போன திருப்பாண்டியன் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயாதிகளுடைய படைபலத்துடன் நாடு திரும்பினான். புனித ஷஹீது அவர்கள் முதுமைப் பருவமுற்றவர்களாக இருந்ததுடன், திருப்பாண்டியனைச் சமாளிக்கும் வகையில் அவர்களிடம் போதிய படைபலமும் இல்லை. என்றாலும், ஏறுபதி அருகே நடந்த வீரப்போரில் ஷஹீது அவர்கள் பாண்டியனை வெட்டி வீழ்த்தியதுடன் தாமும் வீரமரணம் எய்தினார்கள். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போர் கி.பி. 1196 இல் நடைபெற்றது.[2] தமிழக வரலாற்று ஆசிரியர்களின் வரலாற்று நூல்களில் இந்தப்போர் பற்றிய சிறு குறிப்பைக்கூட காணமுடிய வில்லை. இத்தகைய இருட்டடிப்பிற்கு, காலம் தான் பதில் அளிக்க வேண்டும். ஆனால் பெரியபட்டினம், வாணி, வைப்பாறு, வாலிநோக்கம், காட்டுப்பள்ளிவாசல், புல்லந்தை, ஏறுபதி ஆகிய ஊர்களில் தொடர்ச்சியாகக் காணப்படும் நூற்றுக்கணக்கான மீஸான்களுடன் கூடிய அடக்கவிடங்களும் ஷஹீது அவர்கள். அவர்களுடைய தொண்டர்கள் குறிப்பாக அப்பாஸ், ஷம்ஷீத்தீன் உமையா, இஸ்உறாக் (ஷறஉறீதுவின் புத்திரர்) இம்ரான் ஆகி யோர்களது அடக்கவிடங்களும், எழுச்சிமிக்க அந்த இறைநேசர்கள் தங்களது தியாகத்தால் வரைந்த தமிழக வரலாற்றை மக்களுக்கு என்றும் நினைவூட்டுவனவாக உள்ளன. இந்த தியாகிகளது புகழ் வாழ்க்கையை மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர் அவர்கள், காலத்தால் வாடாத கவி மலர்களாக, பாடியுள்ளார்


  1. துர்க்காதாஸ் ஸ்வாமி-கம்மந்தான் கான் சாகிபு (1960)பக்கம் - 83
  2. முகமது இபுறாகிம் லெப்பை ஷஹீது (1953) பக்கம் 142–4