பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

அவரது நல்ல பண்புகளும், செயல்முறைகளும், தீர்க்கமான தீர்ப்புக்களும், பாண்டிய நாட்டுப் பெருந் தலைவர்களது புகழ்ச்சிக்கு பாராட்டுதலுக்கும் உரியவையாக பல காலம் நிலைத்து நின்றன.[1] காயலில், அவரது பெயரைக் குறிப்பிட்டு, வெள்ளிக்கிழமை தொழுகையின் பொழுது, குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது. கி.பி. 1293இல் பாண்டிய மன்னன் இறந்தபிறகு, அவர் தொடர்ந்து பிரதம அமைச்சராக விளங்கினார். இதனால் அவர் ஒரு சில காலம் அந்தப் பகுதியின் மன்னராக இருந்தார் என வரலாற்று ஆசிரியர் லஸ்ஸாப் மிகைப்பட வரைந்துள்ளார் அதன் காரணமாக அவரது சிறப்பும் செல்வாக்கும் ஆயிரம் மடங்கு அதிகரித்து விட்டதாகவும் அவர் குறித்துள்ளார். இதற்கான வேறு ஆதாரம் எதுவும் இல்லை. அப்பொழுது பாண்டியனது சிறப்பான துறைமுகங்களாக காயல்பட்டினம், பெரிய பட்டினம், தேவிபட்டினம் ஆகிய மூன்று துறைகளது செயல் பாடுகள் இந்த அமைச்சரது பொறுப்பில் இருந்தன. சீனம் ஸயாம் நாட்டு புதினப்பொருட்களும், இந்துஸ்தானத்தின் கைவண்ணமிக்க பொருட்களும், நிறைக்கப் பட்ட பெரிய கலங்கள், இறைக்கைகள் பொருத்தப்பட்ட சிறிய குன்றுகளைப் போன்று நீரில் மிதந்தவாறு இந்த துறைகளுக்கு வந்து போய் கொண்டிருந்தன.

சுல்தான் ஐக்கியுதீனின் ஒன்றுவிட்ட தமையனாரான மாலிக்குல் இஸ்லாம் சுல்தான் ஜமாலுத்தீன், துவக்கத்தில் ஆண்டு தோறும் தம்மிடமுள்ள புகழ்வாழ்ந்த இனக் குதிரைகளுடன் கிஸ் நாட்டில் இருந்து கப்பலேறி பாண்டிய நாடு வந்து போய் கொண்டிருந்தார். வருடந்தோறும் இறக்குமதியாகும் பதினாயிரம் குதிரைகளில் அவரது சொந்தக் குதிரைகள் மட்டும் ஆறில் ஒரு பகுதியாகும். நாளடைவில் இவரும் பாண்டிய நாட்டில் நிலையாகத் தங்கிவிட்ட பொழுதும், அவரைச் சார்ந்த வர்த்தகர்கள், பாரசீக நாட்டைச் சேர்ந்த காத்தீப், லஹ்ஷா, பாஹ்ரைன் ஹீர்முஸ், குல்கத்து ஆகிய ஊர்களில் இருந்து குதிரைகளையும் அவைகளை பத்திரமாக பாதுகாத்து கரை இறக்க பழக்கப்பட்ட அரபிகளையும், தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.[2]


  1. Yule Cordier - Travels of Marcopolo - Book ||| chap - XIV
  2. Wassaff - Elliot and Dowson – VOL ||| P.32