பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


12

தில்லியும் தமிழ்நாடும்


பாண்டியப் பேரரசை தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த முதலாவது மாறவர்மன் குல சேகர பாண்டியன் கி.பி. 1310ல் அவனது மக்களால் கொலையுண்டான். மதுரை, கொங்கு ஆகிய பகுதிகளில் முழு உரிமையுடன் ஆட்சி புரிந்த பாண்டிய இளவல்கள், பேரரசு கட்டிலில் அமருவதற்கு போட்டியும் பூசலும் விளைவித்தனர். தமது குறிக்கோளை எய்துவதற்கு அந்நியர் தலையீட்டையும் உதவியையும் எதிர்பார்த்தனர். இன்றைய கருநாடாகப் பகுதியான துவார சமுத்திரத்தில் ஆட்சி புரிந்த ஹொய்சாள மன்னன் மூன்றாவது வீர பல்லாளனது நட்பை, வீரபாண்டியன் நாடினான். இன்னொரு இளவலான சுந்தர பாண்டியன், தில்லியில் அரசாண்ட அலாவுதீன் கில்ஜியின் உதவியைக் கோரினான். இதனைத் தஞ்சை மாவட்ட திருக்களர் கல்வெட்டு "முன்னால் ராசராசன் சுந்தர பாண்டியன் துலுக்கருடன் வந்த நாளிலே, ஒக்கருடையாரும் இவருடைய தம்பிமாரும் அனைவரும் அடியாரும் செத்தும் கெட்டும் போய் அவரது ஊரும் வெள்ளத்தாலும் கலகத்தாலும் பாழாய் இருக்கிற அளவிலே ... ... ... ... " என்று விவரிக்கிறது.[1] முடிவு பாண்டியர்கள் தங்களது ஒற்றுமைக் குறைவாலும், திறமையற்ற நிர்வாகத்தாலும் சிறுகச் சிறுக அழிந்தார்கள்.

இவர்களது பூசலில் தலையிட்ட தில்லி தளபதி மாலிக்காபூர், அவர்களது பலவீனத்தைப் புரிந்து கொண்டு, அவர்களைப் புறக்கணித்தவனாக இராமேஸ்வரம் வரை ஊடுருவிச்


  1. A. R. 642/1902 (திருக்களர்)