பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

மதுரையில் செயல்பட்டு வந்தது. அன்றைய கால நிலையில் மதுரை தில்லியுடன் தொடர்பு கொள்ள பத்து மாதங்கள ஆகின. கி.பி. 1320ல் ஆட்சிக்கு வந்த கியாஸுதீன் துக்ளக் ஆட்சி நீடிக்கவில்லை. அவரது வாரிசான முகம்மது பின் துக்ளக் கி.பி. 1323ல் பதவி ஏற்றபொழுது, மாபார் என அரபிய வணிகர்களால் அழைக்கப்பட்ட தமிழகம் தில்லிப் பேரரசின் இருபத்து மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருந்து வந்தது. அவருடைய குழப்பமான அரசியல் முடிவுகளும், மக்களது மனநிலையைப் பிரதிபலிக்காத அவரது நடைமுறைக்கொள்கைகளும், தில்லித் தலைநகரை மாற்றும் திட்டமும், அவருக்கு பல புதிய பிரச்சனைகளைத் தோற்றுவித்தன. சில அரசியல்வாதிகள் இதனை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்திற்கு வடக்கே இருந்த தில்லிப் பேரரசின் மாநிலங்களான காம்பிளி, திலாங் ஆகியவைகள் தில்லி பேரரசில் இருந்து விடுபட்டு தன்னாதிக்கம் பெற்றன. இதனால் மாபார் தில்லியில் இருந்து துண்டிக்கப்பட்டது. அவரது ஆட்சி முறையை எதிர்த்தனர். அவர்களில் ஒருவராக அவரது உறவினரும் மதுரை ஆளுநருமான செய்யத் ஜலாலுதீன் அஸன் தன்னாட்சி பெற்ற தனி மன்னராக, மாபாரின் சுல்தானாக கி.பி. 1333ல் மதுரையில் ஆட்சி பீடமேறினார்.[1] அவரைத் தொடர்ந்து எட்டு சுல்தான்கள் மதுரை மன்னர்களாக கி.பி. 1378 வரை ஆட்சி புரிந்தனர். அவர்களின் பெயர்களும், ஆட்சிக்காலமும்.

1. ஜலாலுத்தின் அஷன்ஸா கி.பி. 1333–1340 வரை
2. அலாவுதீன் உத்தொஜி கி.பி. 1340–1341 வரை
3. குத்புதீன் கி.பி. 1341 (நாற்பது நாட்கள்)
4. கியாஸுத்தீன் தமகானி கி.பி. 1341–1344 வரை
5. நஸிருத்தீன் கி.பி. 1344–1355 வரை
6. அதில் ஷா கி.பி. 1356–1358 வரை
7. பக்ருத்தீன் முபாரக்ஷா கி.பி. 1359–1371 வரை
8. அலாவுதின் சிக்கந்தர்ஷா கி.பி. 1372–1378 வரை

இவர்கள் வெளியிட்ட வெள்ளி, செம்பு நாணயங்களின் நிழல்படம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அவை மதுரை, பெரிய


  1. Venkataramayya Dr. Journal of Madras University vol. XI-1 p. 44,47.