130 / மூட்டம்
☐சு.சமுத்திரம்
பேரனை நினைத்து அந்த நினைவு கொடுத்த நெஞ்சத்தை அடிப்பது போல் நெஞ்சை அடித்தாள். அவள் அருகே நின்ற ஒரு இளம் பெண் அந்த முதியவளைத் தூக்கிவிட்டுக் கொண்டே, வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள். டவுனுக்குப் போய் விட்டு வீடு திரும்பாத கணவன்மாரை நினைத்துக் கதறும் சத்தங்கள். மகன்களை இழந்ததுபோல் துடிக்கும் தாய்மார்களின் அவலங்கள். இதற்குள், அமீரும் காதர்பாட்சாவும், முத்துக்குமாரோடு அங்கே போனார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிடமும் போய், ஆறுதலாகப் பேசினார்கள். பிறகு அந்தக் கூட்டத்தை ஒருமுகப்படுத்தி, அமீரின் கடைப்பக்கம் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.
திவான் முகம்மது, அமீரைப் பார்த்துவிட்டு தலைதெறிக்க ஓடிவந்தார். அவர் பின்னாலே இன்னொரு முதியவளும் ஓடிவந்தாள். திவான், அமீரின் கைகளைப் பிடித்துக்கொண்டு, கேவிக் கேவி அழுதார். அவரது கைகள் இரண்டையும் தன் தோள்பக்கம் போட்டுக் கொண்டு அழுதார். அமீர் அவர் முதுகைத் தட்டி, அணைத்துக் கொண்டபோது, திவான் அவரிடம் குழந்தைபோல் கேவிக் கேவி அழுதுகொண்டே சொன்னார்.
‘என் பையன் சம்சுதீன் என்ன ஆனானோ? மூணு நாளா கண்ணுக்கு அகப்படலேயே... ஒருநாள் கூட வீடு வராம இருந்ததில்லை... பாவிப்பயலுவ டெலிபோனையும் கட் பண்ணிட்டானுவ... நான் எதாவது தப்பு செய்திருந்தால் அதை மன்னிச்சு என் மகனைக் கண்டு பிடிச்சுக் கொடு. அமீரு இனி மேல் நீ என்ன சொன்னாலும் நான் கட்டுப்படுவேன்.’
அமீர் ‘அல்லா காப்பாத்துவான்’ என்று சொல்லிவிட்டு அவர் பிடரியைத் தடவிக்கொடுத்தார். இப்போதுதான் அவரும் மனுசன் என்பது மாதிரி பார்த்த திருமதி திவான் முகம்மதுவை ஆறுதலோடு பார்த்தார். ஆனாலும் காதர்பாட்சாவுக்கு கடுங்கோபம். இந்த திவான், ஜமாத்து தலைவராம். ஊரே உயிரோட துடிக்குது. கர்ப்பிணிப்