பக்கம்:மூவரை வென்றான்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

மூவரை வென்றான்


நான் சொல்லிவிடுகிறேன். அந்தக் கிழவர் கூறியது எட்டனா விலைக்குத் தயார் செய்த கற்பனைச் சரக்கோ, அல்லது உண்மையேதானோ, எனக்குத் தெரியாது. அதற்கு நான் உத்திரவாதமும் அளிக்க முடியாது. இவ்வளவு கற்பனைத் திறன் இருக்குமானால் அவர் ஏன் வெற்றிலைக்கடை வைக்க வேண்டும், பாவம்!

***

இராணி மங்கம்மாள் காலத்தில் வீரமானியமாகக் கிடைத்த கிராமம் இது.‘வீரமல்லுத் தேவன்’ என்ற மறவர் குல வீரனே இதை முதன் முதலில் வீரமானியமாகப் பெற்றவன். இப்போது இந்த ஊரில் குடியிருப்பவர்களில் பெரும்பாலோர் அவனுடைய வம்சாவளியைச் சேர்ந்த, மறவர்கள்தாம்.

மதுரைச் சீமையிலே மங்கம்மாள் ஆட்சி சீரும் சிறப்புமாக நடந்தவரை தனத்குக் கிடைத்த இனாம் கிராமத்தை, வீரமல்லனும் சுதந்திரமாக அனுபவிக்க முடிந்தது. மங்கம்மாள் ஆட்சி ஒடுங்கிப் போனபோதுதான், இனாம் சொத்தாகப் பெற்ற வீரமானியத்தைச் சுதந்திரமாக அனுபவ பாத்தியதை கொண்டாடுவதற்குத் தடைகளும் விரோதங்களும் ஏற்பட்டன. தடைகளையும் விரோதங்களையும் ஏற்படுத்தியவர்களோ ஆள் பலம் உள்ள ஜமீன்தார்கள். வீர மல்லனோ, கேவலம் ஒரு சிறு கிராமத்தின் தலைக்கட்டு நாட்டாண்மைதான்.

இங்கே மேற்குத் திசையிலுள்ள மலைத்தெர்டரில் உற்பத்தியாகி வரும் கன்னிமாலை ஆறு என்று ஓர் நதி பாய்கிறது. மூவரை வென்றான் கிராமத்தையும் இதன் தெற்கே இரண்டரை மைல் தொலைவில் இருக்கும் நத்தம்பட்டி என்ற ஜமீனையும் நடுவே பிரித்துக் காட்டும் எல்லையாக ஓடியது. இந்தக் கன்னிமாலையாறு. ஆற்றின் வடகரையிலிருந்து. வீரமல்லனுக்குரிய இனாம் நிலம் தொடங்குகிறது; தென் எல்லையிலிருந்து நத்தம்பட்டி ஜமீன் நிலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/10&oldid=505545" இலிருந்து மீள்விக்கப்பட்டது