பக்கம்:மூவரை வென்றான்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

99

மோதிரக் கடுக்கன்களின் வைரங்கள் மின் மினிப் பூச்சிகளை வளையமாகக் கட்டித் தொங்கவிட்ட மாதிரி ஜவலித்தன. தலையிலிருந்த பருத்தி விதை மூட்டை அந்த ஒளியை மறைத்து நிழலிட்டு மறைத்தது. சாடை மாடையாக விழுந்த 'கசமுசல்' களை அவர் கவனித்துக் கொண்ட பின்பே மாறனேரியை விட்டு நகர்ந்தார்.

'கடுக்கனை. அறுத்துப் போடறதாக இல்லே பேசிக்கிட்டாக'—ஓரிடத்தில் 'கசமுசல்'களுக்கிடையே இப்படி ஓர் குரல் கொஞ்சம் இரைந்தே அவர் காதில் விழுந்தது.

ஐயருக்கு விஷயம் புரிந்துவிட்டது. 'சரி! பயல்கள் இன்றைக்கு மோதிரக் கடுக்கனில் கண்வைத்துவிட்டார்கள்... ஆளுக்கே கண்ணி வைக்கத் தவறியிருக்க் மாட்டார்கள் என்று உறுதியாக அனுமானித்துக்கொண்டார் அவர். அன்று அந்த இருள் செறிந்த இரவில் தலைவெட்டிப்பள்ளத்தில் தம்முடைய தலைக்கு ஆபத்து காத்திருக்கிறது என்பதை நொடியில் புரிந்துகொண்டார் அவர் நினைத்திருந்தால், அப்படியே இரண்டாவது பேருக்குத் தெரியாமல் சிவகாசிக்கு மூட்டையோடு திரும்பிப் போயிருக்க முடியும் அவரால். ஆனால், அவர் ஒரு சுத்த வீரர். அப்படிச் செய்ய மணம் இசையவில்லை. தைரியமாக மாறனேரி ஊரைத் தாண்டித் தலைவெட்டிப் பள்ளத்தை நோக்கி நடந்தார். இருளிலும் ஆபத்து இருக்கிறது என்று அறிந்துகொண்ட பின்னும் மிடுக்கும் கம்பீரமும் இருந்தன அவர் நடையில்.

'இன்று இந்த ஆபத்தைக் கடந்து மூட்டையோடு நான் மட்டும் ஊர் போய்ச் சேரவில்லையானால், இதுவரை இந்த மோதிரக் கடுக்கன்களைப் போட்டுக்கொண்டு நானும் ஒரு தீரன் என்று அலைந்ததற்கு அர்த்தமே இல்லை. பார்த்துவிடுகிறேன் ஒரு கை --' என்று சூளுரைத்துக்கொண்டு, மனோதிடத்தைப் பொங்கச் செய்தார். தலைவெட்டிப் பள்ளம் நெருங்கியது.

ஐயர் வஞ்சகமில்லாமல் பொடி போடுவார். மடியில் சிவகாசியில் வாங்கிய புதுமட்டையாக இரண்டு மூன்று