பக்கம்:மூவரை வென்றான்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

மூவரை வென்றான் தலைவெட்ட்க்...

பொடி மட்டைகள் நிறைந்த பொடியோடு கிடந்தன. பள்ளத்தில் இறங்குவதற்கு முன்னால், அங்கணப் பரதேசி மடத்து ஆலமரத்தின்கீழ் கொஞ்சம் நின்று சில திட்டங்களைத் தந்திரமாக வகுத்துக்கொண்டார். மடியிலிருந்த பொடி மட்டைகளில் இரண்டை அவிழ்த்து இடது உள்ளங்கையில் கொட்டிக் கையை இறுக்கி மூடிக்கொண்டார். வலது கைதான் சிலம்பக் கழியைப் பிடித்துக்கொண்டிருந் ததே!

வலது கையில் சிலம்பக் கழி! இடது கையில் பொடி! தலைமேல் பருத்தி விதை மூட்டை.. ஐயர் ஓரக் கண்களைப் பாதையின் இருமருங்கிலும் சுழற்றி இருளை ஊடுருவும் கூரிய நோக்குடன் தலைவெட்டிப் பள்ளத்திற்குள் இறங்கினார்.

பள்ளத்திற்குள் இறங்கி நாலைந்து கெஜ தூரம்தான் நடந்திருப்பார். அவருடைய வலது புறமும் இடது புறமும் இரண்டு மின்னல், துணுக்குகள் அவரது காதுகளை நெருங்கின. கொஞ்சம் உற்றுப் பார்த்தால், அவை மின்னல் துணுக்குகளல்ல, நன்றாகத் தீட்டப்பட்ட இரண்டு கூரிய கத்திகள் என்பதும், அவற்றால் இரண்டு அம்பலக்காரர்கள் அவருடைய காதுகளை மோதிரக் கடுக்கன்களோடு அறுக்க முயல்கிறார்கள் என்பதும் புரியும். ஐயருடைய இடது கை மெல்ல உயர்ந்து இறுக்கிய உள்ளங்கையை விரித்து இடது பக்கம் கத்தியோடு நெருங்குகிறவனுடைய கண்களைக் குறிவைத்துக் காரம், மணம், குணம் எல்லாம் நிறைந்த பொடியைத் தூவியது. 'அச்....ஆச்...அச் ஆச்' இடது புறத்து ஆசாமி, தும்மல்மேல் தும்மலாகத் தும்மிக்கொண்டே கண்ணைக் கசக்கினான். கத்தி தரையில் நழுவியது. ஐயர் அதைக் காலால் தார எற்றிவிட்டார். வலது புறம் நின்றவனுடைய இரண்டு முழங்கால்களுக்கும் இடையே அவனுக்கே தெரியாதபடி அவருடைய சிலம்பக் கழி நுழைந்தது. நுழைந்த கழி மின்னல் வேகத்தில் இரண்டு முழங்கால்களையும் சேர்த்து ஒரு நெம்பு நெம்பியது.