பக்கம்:மூவரை வென்றான்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

மூவரை வென்றான்/தலைவெட்டிக்...


இருவரும் நடந்து கொண்டிருந்தனர். ஐயருக்குத் தொண்டையை கமறிக்கொண்டு வந்தது. தலை கிறங்கிச் சுழல்வது போலிருந்தது.

“என்னம்மா இது என்னபொடி? மாயப் பொடியா? மூக்குப் பொடியா?...தொண்டை கமறுது தலை சுத்துது!” ஐயர் சிரித்துக் கொண்டே கேட்டார்.

“ஐயோ! சாமி! நல்ல முக்குப் பொடிதானுங்களே... கேட்டு வாங்கிட்டு வந்தேனே?-அவள் கூறினாள். இல்லை; நடுங்கி வெடவெடக்கும் இதயத்தை மறைத்துக்கொண்டு, அவள் வாய் இப்படிக் கூறியது.

இருவரும் பள்ளத்தில் இறங்கி விட்டார்கள். ஐயருக்குத் தலை அதிகமாகக் கிறங்கியது. மூட்டையைக் கீழே போட்டு விட்டு, அப்படியே துவண்டுபோய்க் கீழே உட்கார்ந்தார். சில விநாடிகளில் சுருண்டு படுத்துவிட்டார். அவருக்கு நினைவு மங்கி ஒடுங்கும்போது யாரோ தடதடவென்று ஒடி வரும் ஓசையும், “என்ன ராஜாம்பா? காயா பழமா’ என்ற சொற்களும், அந்தப் பெண் பழைய ஒய்யாரச் சிரிப்புடனே ஏதோ பதில் கூறுவதும் அவர் காதுகளில் விழுந்து மயங்கி மாய்ந்தன. நல்ல மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் போது காதுகளில் ஏதோ சுரீர் என்று வலித்தது. தூக்கத்தில் அலறுவதுபோல “ஐயய்யோ..? என்று. ஹீனஸ்வர்த்தில் அலறினார் அவர். அதன்பின் அவருக்குப் பிரக்ஞையே இல்லை.

விடிவெள்ளி முளைத்துப் பெளர்ணமி நிலாவின் ஒளி சோகை பிடித்தமாதிரி மங்கி வெளுத்தது. தலைவெட்டிப் பள்ளத்தில் விழுந்த கிடந்த ஐயர் மெல்லக் கண் விழித்தார். காதுகளில் இசிவெடுத்து விண் விண் என்று வலி தெறித் தது. கையால் காதுகளைத் தடவினவர் ‘ஐயோ!’ என்று மகா கோரமாக அலறினார். இரண்டு காதுகளிலும் கடுக்கன்கள் இல்லை. மூளியாகி அறுபட்டிருந்த் அறைகுறைக் காதுகளில் ரத்தம் வடிந்து போய் உறைந்திருந்தது. பக்கத்தில் அவருடைய சாமான் முட்டையும் கிடந்தது.