பக்கம்:மூவரை வென்றான்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊசிக்கொண்டை மாயாண்டித்தேவன்

முல்லையூற்று ஒரு அழகிய சிற்றுார். மேற்குத் தொடர் மலையை ஒட்டி அமைந்திருந்த மலையடிவாரத்துக் கிராமம். திருநெல்வேலி ஜில்லாவுக்கே உரிய இயற்கைப் பொலிவு பூரணமாக விளங்கும் இடம். மர்ந்தோப்பும் தென்னந் தோப்புமாக ஊரைக் சுற்றி ஒரே பசுமை மயம். அங்கங்கே பிரிந்து ஒடும் சிறு சிறு வாய்க்கால்கள். அவைகளுக்கு வேலி பிடித்தாற்போல அமைந்திருக்கும் தாழம் புதர்கள், வான மண்டலத்திற்குக் துரண் நாட்டியது போன்ற பெரிய மருத மரங்கள். வயல்வெளிகளில் இடையிடையே தாமரைப் பொய்கைகள். இன்னும் எவ்வளவோ!

இப்படி அழகிய கிராமமாக இருந்த முல்லையூற்றில் மக்கள் எதற்காவது துன்பமுற்றார்களேயானால், அது எப். போது நினையாமலிருக்கிறார்களோ அப்போது திடீரென்று சற்றும் எதிர்பாராமல் தோன்றும் மாயாண்டித் தேவனுக்காகப் படும் துன்பமே. அந்த வட்டாரத்தில் அழுத பிள்ளையை வாய்மூடி நடுங்கவைக்கும் ஆற்றல் அவன் பெயருக்குக்கூட இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கொலை கொள்ளைகள் அவனுக்குக் குழந்தை விளையாட்டுப் போல. எப்போது, எங்கே, எப்படி வருவான் என்று யாரும் அறியமுடியாது. அவன் மறைந்து வசிக்கும் இடம் அவனுக்கும் அந்தப் பொதிகை மலைக்குமே தெரியும். மலைப்பகுதிகளில் பழகிய அவனிடம் வேறோர் திறமையும் இருந்தது. சில அபூர்வமான மூலிகைகளையும் சித்துக்களையும் அவன் தெரிந்துகொண்டிருந்தான். அதைக் கொண்டு சாதாரணமாகச் சாதிக்க முடியாத காரியங்களையும் அவன் சாதித்து