பக்கம்:மூவரை வென்றான்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

மூவரை வென்றான்


கட்டிவில் போய்ப் படுத்துப் போர்வையை இழுத்து விட்டுக் கொண்டிருந்தவர் யாரோ அறைக் கதவை மூடித் தாழிடுகின்ற ஓசை கேட்டுத் துள்ளி எழுந்தார். அவர் கண்கள் அவரை ஏமாற்றுகின்றனவா? இல்லையானால் வெறும் பிரமையா? கனவா?

கதவுத் தாழ்ப்பாளைப் போட்டுப் பூட்டிவிட்டு வீரமல்லன் அவர் எதிரே நின்று கொண்டிருந்தான். அவன் இதழ்களில் குறும்புத்தனமும் அலட்சிய பாவமும் நிறைந்த புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது. ஜமீன்தாருக்குக் கை கால்கள் வெடவெடத்தன. புலியைக் கண்ட பூனையானார் அவர்.

“ஜமீன்தார்வாள்! நான்தான் வீரமல்லன்! உங்களைச் சந்திப்பதற்கு இந்த நேரம்தான் எனக்கு வாய்த்தது. உங்களுடைய உறக்க நேரத்தில் குறுக்கிட்டதற்கு அடியேனை மன்னிப்பீர்களோ?” என்று வீரமல்லன் அலட்சியமாகச் சிரித்தான். கம்பீரமான தோற்றத்தோடு பின்னால் கையைக் கட்டிக்கொண்டு அவன் நின்ற விதமே ஜமீன்தாரை மலைத்துப் போகும்படிச் செய்தது.

“நீ வீரமுள்ள மறவனாக இருந்தால் மாற்றான் மாளிகையில் திருடனைப்போல் நுழைந்திருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” என்று தைரியத்தைக் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டு கூறினார் ஜமீன்தார்.

“வீரனைப்போல் நுழைய முயன்றேன். ‘ஜமீன்தார் வாள்’ மறுத்துவிட்டார். என்னால் பொறுக்க முடியவில்லை. இனியும், கொள்ளை கொடுப்பதற்கும் விளைந்த பயிரைப் பறிகொடுப்பதற்கும் என்னுடைய இனாம் கிராமமும் நானும் தயாராக இல்லை. இரண்டிலொன்று தீர்த்துக் கட்டிக் கொண்டு போவதற்குத்தான் இப்போது இப்படித் திருடனைப் போல வந்திருக்கிறேன்.”

“உன்னுடைய இனாம் கிராமத்தில் திருடர்கள் பயிரை. அறுத்துக்கொண்டு போவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் நானா பொறுப்பு? என்னைத் தேடிவர வேண்டிய காரணம்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/14&oldid=505582" இலிருந்து மீள்விக்கப்பட்டது