பக்கம்:மூவரை வென்றான்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

39


அல்லவா அணிவகுத்து நிற்கின்றன?” என்று மிரண்டு ஓடிப் போயிருப்பார்கள். மனோதிடத்தில் குலையாதவராகிய தெய்வச்சிலைத் தேவராக இருந்ததனால்தான் அவரால் அதை மரக்கிளையின் இடுக்கு வழியாகப் பார்த்துக் கொண் டிருக்க முடிந்தது.

‘அந்தப் பன்னிரண்டு பேரில் ஒருவன்தான் பெரிய மாயனா? அல்லது அவன் வேறு எங்காவது இருக்கிறானா?’ என்று தேவர் மனத்தில் ஒரு சந்தகம் எழுந்தது. கீழே இருப்பவர்கள் சிரித்தும் கேலி செய்தும் கும்மாளமடித்ததைப் பார்த்தால் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாகிய பெரிய மாயன் அப்போது அங்கே அந்தக் கூட்டத்தில் இருக்க முடியாது என்று ஒருவழியாகத் தமது சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொண்டார் தேவர்.

கீழே அகல் விளக்கை அணைத்துவிட்டுத் தீவட்டி சகித மிருந்தவர்கள் புறப்பட்டுவிட்டனர். தீவட்டிகள் சிறிது தொலைவு சென்றதும் ஐயனார் கோவிலும், குதிரையும். வாகை மரமும், பழையபடி அந்தகாரத்தில் மூழ்கின. தீவட்டிகளும், உருவங்களும், மலையடிவாரத்திலிருந்து மேற்குப் புறமாக ஊருக்குள் செல்லும் கொடி வழியின் குறுகலான பாதையில் நடந்துகொண்டிருப்பதை அவர் மரத்திலிருந்தே பார்த்தார்.

சுற்றி வளைத்து அடிமரத்தின் வழியே கீழே இறங்க அதிக நேரமாகுமென்று அப்படியே கிளையிலிருந்து குதிரையின் தலைமேல் பாதங்களை ஊன்றிக் கீழே இறங்கினார் தேவர். தலையிலிருந்து கீழே தரையில் குதித்தபோது வாகை மரத்து ஆந்தை மீண்டும் குரூரமாக அலறியது.

“சனியனே! உனக்கு வாய் அடைக்காதா?” என்று அதைச் சபித்துக் கொண்டே தீவட்டிகளின் ஒளிப்புள்ளிகளையே இருளில் குறியாக வைத்து அந்த வழியில் அதிக வேகமின்றியும் அதிக மெதுவின்றியும் பதுங்கிப் பதுங்கிப் பின் தொடர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/41&oldid=507803" இலிருந்து மீள்விக்கப்பட்டது