பக்கம்:மூவரை வென்றான்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

45


ஆள்தான் கூட்டத்தின் தலைவனான பெரிய மாயன் என்று கருதப்பட்டான்.

குதிரைகள் ஒலைப்பாயில் சிதறிய கேழ்வரகின்மேல் செல்லும்போது சறுக்கிச் சறுக்கிக் கீழே விழும். அந்தச் சமயம் பார்த்து மறைந்திருந்த வீரர்கள் பாய்ந்து மடக்கிக்கொள்ள வேண்டும் என்பது ஏற்பாடு. இந்த ஏற்பாடு மறைந்திருந்த வீரர்களுக்கும் முன்பாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.

பெரிய மாயன் பிடிபட்டால் ‘என்ன காரணத்தைக் கொண்டும் தெய்வச் சிலையாருடைய அநுமதியின்றி அவனது முகமூடியைக் கிழித்து அவன் யாரென்று தெரிந்துகொள்ள எவரும் முயலக்கூடாது’-என்பது எல்லோருக்கும் எச்சரிக்கப் பட்டிருந்தது.

இருட்டியதும் மேற்படி ஏற்பாடுகளை எல்லாம்.தேவர் முறைப்படி செய்துவிட்டு முதல் நாள் போலவே வாகை மரக் கிளையில் ஏறிப் பதுங்கிக்கொண்டார். அவரைத் தவிர அங்கு வேறெவரும் இல்லை.

எல்லோரையும் அனுப்பிவிட்டுத் தம் திட்டத்தைச் சரி பார்ப்பதற்காகவே தேவர் வாகை மரத்தில் தங்கியிருந்தார்.

உரிய நேரத்தில் அன்றைக்கும் கொள்ளைக்காரர்கள் வந்தனர். வழக்கம்போல் ஒருவன் குதிரையின் உடலுக்குள் நுழைந்தான். அடுத்த கணம் “ஐயையோ மோசம் போய் விட்டது!” என்று அலறிக்கொண்டே வெளியில் வந்தான். தேவர் மரத்தின் மேலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்ன? என்ன? ஏன்? உள்ளே இல்லையா?” மற்றவர் கள் ஆவலோடு கேட்டனர்.

“குதிரை மோசம் செய்துவிட்டது.”

“குதிரையாவது மோசம் செய்கிறதாவது? என்னடா உளறுகிறாய்?”

“உள்ளே தீவட்டி, எண்ணெய்க்குடம், அங்கிகள், ஒன்றுமே காணவில்லை!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/47&oldid=507811" இலிருந்து மீள்விக்கப்பட்டது