பக்கம்:மூவரை வென்றான்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

மூவரை வென்றான்/வெள்ளையத்...

கார்ந்திருந்த தலைக்கட்டுக்களும் ஒவ்வொருவராக எழுந்திருந்து, வாசற்புறம் வந்துவிட்டார்கள்.

“இது என்ன மீனாட்சி?” - வெள்ளையத்தேவன் பரபரப்போடு கேட்டான்.

கிறிது நேரம் மீனாட்சி பதிலே சொல்லவில்லை. வெறுங் கண்ணீர், விக்கலும், விம்மலும், சேர்ந்த அழுகையாகப் பீறிட்டுக்கொண்டு வந்தது இப்போது.

“இப்படி ஒன்றும் சொல்லாமல் அழுதால், எனக்கென்ன புரியும் மீனாட்சி?” - அவன் மீண்டும் கேட்டான்.

“அண்ணா.நான். நான். வந்து மலடியாம் அண்ணா!.. அவங்க என்னை ஒதுக்கிட்டு வேறே இடத்துலே...கட்டிக்கப் போறாங்களாம்!”...விம்மலுக்கும் மீறிப் பொங்கிவரும் அழுகையை அடக்கமுடியாது திணறிக் கொண்டே கூறினாள் மீனாட்சி. அடுத்த கணம் அவள் வீட்டிற்குள்ளே புடவைத் தலைப்பால் முகத்தை மறைத்துக்கொண்டே, அழுதவாறு ஓடிவிட்டாள். வெள்ளையனின் மனைவி அவளைக் கைத் தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றாள்.

“ஹாங்! அப்படியா? சொன்னான்? கரிசல்குளத்தா னுக்கு என்ன திமிர்?” - பசியோடு குகைக்குள் இருக்கும் சிங்கத்தின் முழக்கத்தைப்போலிருந்தது தேவனுடைய குரல். நாட்டாண்மையின் ஆத்திரத்தைவிடத் தலைக்கட்டுக்களின் ஆத்திரம் அதிகமாகவே இருந்தது. ஏனென்றால், அது வெள்ளையத்தேவனுடைய குடும்பத்துக்கு ஏற்பட்ட அவ மானம் மட்டுமில்லை; கபிலக்குறிச்சி ஊருக்கே ஏற்பட்ட அவமானம். அத்தனை பேரும் மனம் கொதித்துக் குமுறலானார்கள்.

ஐந்தே முககால், ஆறு அடி மதிக்கத் தக்க உயரமும், கட்டுமஸ்தான தேகமும், ராஜ கம்பீரமும், வாலிப அழகும். திகழும் தோற்றமும் கொண்ட வெள்ளையத்தேவன் தங்கைக்கு நேர்ந்த அவமானத்தால், எரிமலையாகவே மாறி விட்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/60&oldid=954897" இலிருந்து மீள்விக்கப்பட்டது