பக்கம்:மூவரை வென்றான்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

85

புன்னகையோடு உற்றுப் பார்த்தான். பின்பு தலைக்கட்டுக் களைப் பார்த்துக் கூறினான்.

“நண்பர்களே! முதலில் இவனைப் பாறையிலிருந்து அவிழ்த்து விடுங்கள்.”

“பிரபு! இந்த அயோக்கியன்தான் தங்கள் முதுகில் அம்பு செலுத்தியவ்ன்! இவனை விடுவதாவது? சித்திரவதை செய்யவேண்டும்."—தலைக்கட்டுக்கள் கொதிக்கும் குரலில் கூறினார்கள்.

“உங்கள் எல்லோரையும்விட, இவனைப் பற்றியும், இவன் செயல்களைப்பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். நண்பர்களே! இவன் மலைப்பளிஞன் இல்லை! தீவட்டிக் கொள்ளைக்காரர்களின் தலைவன். என்னைப் பழி வாங்குவதற்குக் காத்திருந்த பாப்பைய நாயக்கன்! சில நாழிகைகளுக்கு முன் இவன் என் காதிலிருந்த கத்தி வடுவை எறும்பு புகுந்துவிட்டதாகப் பொய் சொல்லித் தடவிப் பார்த்ததும், பிறகு என்னை இடைவிடாமல் பின்தொடர்ந்ததும், இவனுடைய நடிப்பையும் மீறி உண்மையை எனக்குக் கூறிவிட்டன. ஆனால், நல்ல கம்பளத்து நாயக்கர் குலத்தில் பிறந்த இந்த ஆண் மகன், என்னோடு நேருக்குநேர் போரிடாமல், என் முதுகிலே அம்பு போட்டு என்னைக் கொன்று தனக்கு இழுக்கைத் தேடிக்கொண்டு விட்டானே?"—என்றுதான். இந்த மரணாவஸ்தை நிலையில் நான் ஏங்குகிறேன். என் வாழ்வில் என்றாவது ஒரு நாள் இவன் எனக்கு எமனாக வருவான் என்பதை இன்றல்ல, ஆறு வருஷத்திற்கு முன்பே தான் அறிவேன்...அது இருக்கட்டும், நான் வேண்டிக் கொள்கிறேன் நண்பர்களே... முதல் வேலையாக இவனை அவிழ்த்துவிடுங்கள் நீங்கள் அவிழ்த்துவிட மறுத்தால், நான்தான் உயிர் வேதனையோடு எழுந்திருந்தாவது அவிழ்த்துவிட வேண்டும்.”...இப்படிக் கூறியவாறே, வெள்ளையன் கையூன்றி எழுந்திருக்க யத்தனித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/87&oldid=508116" இலிருந்து மீள்விக்கப்பட்டது