பக்கம்:மூவரை வென்றான்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

மூவரை வென்றான்

"வேண்டாம் பிரபு, வேண்டாம், நாங்களே செய்கிறோம்"–என்று கூறிக்கொண்டே, உடனிருந்தவர்கள் பாறையிலிருந்து அந்தப் பளிஞனை அவிழ்த்துவிட்டனர். கொடிகளால் இறுக்கப்பட்டுக் கிடந்ததனால் அவன் உடலில் பாளம் பாளமாகத் தடிப்பு விழுந்து கன்றிப் போயிருந்தது.

“பாப்பையா! கொஞ்சம் இப்படி என் அருகே வா"–அன்பு இழையும் கருணைக் குரலில் வெள்ளையத் தேவன் அழைத்தான்.

“என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் மனிதரில்லை; தெய்வம்".. தழுதழுக்கும் குரலில் இவ்வாறு கூறிக் கொண்டே, வெள்ளையத் தேவனின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான் பாப்பைய நாயக்கன்.

“என்னை வணங்காதே பாப்பையா. தெய்வம் மனித சரீரத்தில் இல்லை. அந்தச் சரீரத்தின் அதியுன்னதமான குணங்களில் இருக்கிறது. அந்தக் குணங்களை உன் சரீரத்தில் குடியேற்றுகிற முயற்சியில் ஈடுபட்டால், நாளை முதல் உனக்கும் மற்றவர்களுக்கும் நீயேதான் தெய்வம்.”

“இல்லை, இல்லை, நான் பாவி. கொலைப் பாதகன். திருடன். தீவட்டிக் கொள்ளைக்கர்ரன். நான் தெய்வமாக முடியாது"–பாப்பையன் கதறினான்.

“ஏன் முடியாது? நன்றாக முடியும்! தெய்வத்தை இந்தத் தலைமுறையில் வணங்கும் அடியார்கள், அடுத்த தலைமுறைக்குத் தாங்களே தெய்வமாகிவிடுகிறார்களல்லவா? உன் ஒழுங்கான வாழ்வுக்கு வழி சொல்லுகிறேன் பாப்பையா! அதை நீ கேட்டாயா?”

“கேட்கிறேன் சுவாமி!”

“வெறுமனே சொன்னால் போதாது! இதோ! கீழே வடிந்திருக்கும் என் ரத்தத்தைத் தொட்டு, “நான் நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன்’ என்று சத்தியம் செய்ய வேண்டும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/88&oldid=508117" இலிருந்து மீள்விக்கப்பட்டது