பக்கம்:மூவரை வென்றான்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

மூவரை வென்றான்

"ஐயோ! சுவாமீ! என்னை மீண்டும் ‘செல்வம், ஆசை” என்ற படுகுழிகளில் தள்ளாதீர்கள். நான் இப்படியே. உங்களோடு சாகப் போகிறேன்” என்று பாப்பையன் அலறினான்.

“கூடாது! பாப்பையா, அன்றிரவு எந்த மாளிகையில் நீ சுவரேறிக்குதித்துத் திருடனாக நுழைந்தாயோ, அதே மாளிகைக்குச் சொந்தக்காரனாகப் போகிறாய். ஒரு காலத்தில் உன்னை ஏங்க வைத்த செல்வம், உனக்குக் கிடைக்கப் போகிறது. தானதர்மங்களை மனங்குளிரச் செய்து, கர்மயோகியாக வாழ்நாளைக் கழி. உன்னை அழ வைத்த செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்துக் கொடுத்துப் பழிவாங்கு! உன்னைத் திருடனாக்கிய செல்வம், வருங்காலத்தில் பிறரையும் திருடராக்காமல் அதன் கொட்டத்தை ஒடுக்கு!” என்று ஆவேசம் வந்தவன்போல மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே போனான் வெள்ளையத்தேவன்.

“பிரபு! தங்கள் மனைவி மக்களுக்கு நாங்கள் என்ன பதில் கூறுவது?” என்று தலைக்கட்டுக்கள் அழுகைக்கு இடையே விம்மிக்கொண்டே கேட்டனர்.

“வெள்ளையத்தேவர் வானுலகில் இருந்து, எப்போதும். உங்கள் நலனைக் கண்காணித்து வருவார் என்று கூறுங்கள். நீங்கள் செய்த சத்தியத்தின் மேல் ஆணையாகப் பாப்பைய நாயக்கன்தான் பழைய தீவட்டிக்கொள்ளைக்காரனென்றோ அவனால் நான் கொலை செய்யப்பட்டேன் என்றோ, என் மனைவி மக்களிடம் கூறக்கூடாது! முடிந்தவரை பிறரிடமும் கூறவேண்டாம்” என்று வெள்ளையத்தேவன் கூறினான், உள்ளத்தின் கருணையொளி அவன் சொற்களிலே பிரகாசித்தது. அடுத்த கணம்...அவன் ஜீவன் ஒளியோடு ஒளியாக ஐக்கியமாயிற்று. ஜீவனற்ற வெள்ளையத்தேவனின் சரீரத்தை தங்கள் கண்ணீரால் நீராட்டி, குகைக்குள்ளேயே அடக்கம் செய்தனர் தலைக்கட்டுகள்.

இதற்கப்பால், பாப்பைய நாயக்கன் பண்ணைத்தேவர் மாளிகையை அன்ன சத்திரமாக மாற்றி, ஏழை எளியவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/90&oldid=508119" இலிருந்து மீள்விக்கப்பட்டது