உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

மேனகா

“அவர் வரவில்லை. நாம் இந்த ஊருக்கு வந்த அன்றைக்கே டாக்டர் தம்முடைய வீட்டிலேயே ஆபரேஷனைச் செய்து விட்டாராம்; பணம் வரவில்லையே என்ற நினைவினால், உண்மையை நம்மிடம் சொல்லாமல் இதுவரையில் மறைத்து வைத்திருந்தாராம். தங்கம்மாள் எழுந்திருக்காமல் இருப் பதற்கும், உடம்பின் நோயை உணராமல் இருப்பதற்கும் இதுவரையில் ஒரு வகையான மயக்க மருந்தைக் கொடுத்து வைத்திருந்தாராம். அவர் இப்போது இன்னொரு மருந்தை அனுப்பி யிருக்கிறார். அதைக் கொடுத்தால், எல்லாம் சரியாய்ப் போகுமாம்” என்ற கூறியவண்ணம் தமது கையில் வைத்திருந்த ஒரு மருந்தை உடனே தங்கம்மாளின் வாயில் ஊற்றினான். அவன் சொன்ன விநோதமான வரலாற்றைக் கேட்ட கனகம்மாளும் மற்ற ஜனங்களும் அப்படியே திகைத்து வியப்படைந்து கல்லாய்ச் சமைந்து நின்றனர். அவ்வாறு ஐந்து நிமிஷ நேரம் சென்றது. தங்கம்மாளின் முகத்தில் ஒரு வகையான மாறுபாடு தோன்றியது; இரத்த ஒட்டமும் அழகும் திரும்பின. அவள் தூங்கி விழிப்பவளைப்போல தனது கண்களைத்தெளிவாகத் திறந்து கொண்டு, “இது எந்த இடம்?” என்றாள். அடுத்த நிமிஷம் அவள் தனது உடம்பை அப்புறம் இப்புறம் திருப்பி எழுந்து திண்டில் சாய்ந்துகொண்டு நாற்புறங்களையும் வியப்போடு பார்த்துக் கனகம்மாளை நோக்கி, “உங்களுடைய பிள்ளை எங்கே?” என்றாள்.


★★★★★★★★★
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/233&oldid=1252409" இலிருந்து மீள்விக்கப்பட்டது