பக்கம்:மேரியின் திருமகன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

விழிகளைத் தொட்டார், ஒளி பெற்றனர்
கண் கிடைத்த மகிழ்ச்சியில் கைகொட்டி ஆடினார்கள்.
ஒருதொழு நோயாளி வழியில் முழந்தாளிட்டு
ஆண்டவரே நீர்விரும்பினால் குணமாவேன் என்றான்
ஐயனும் அவன் அருகில் நெருங்கினார்.
தானொரு பாவி எனப் பதறினான்
இரங்கினார், இனிதே நலம் பெற்றான்.

கல்லறைக் காட்டில் இருவர் பேயாடினர்
அவ்வழியே எவரும் செல்ல இயலாது
அழுவார் தொழுவார் மறிப்பார் அடிப்பார்
அவ்வழியே ஆண்டவர் ஒருநாள் சென்றார்
கடவுளின் மகனே காலம் வருமுன்னே
வதைக்க வந்தீரா? எனக் குமுறினர்
எம்மை பன்றி கூட்டத்துள் ஓட்டுக,
என்றனர், ஆமென் என்றார் ஆயிற்று.
பன்றிகள் கடலிற் பாய்ந்து மாய்ந்தன.
நாயாய் அலைந்து திரிந்தவர்கள் நலமானார்.

பெரும்பாடுள்ள பெண்ணொருத்தி பின் தொடர்ந்தாள்
அவள் தின்னாத மருந்தில்லை. தேடாத தெய்வமில்லை
தேவனின் திருவடியே சரணென்று வந்தாள்
பின்னாலிருந்து அவள் மேலாடையைத்
தொட்டாலே போதுமென்று தொட்டாள்
துன்பம் தீர்ந்தாள். தொழுதாள். ஐயர்
ஆடையைத் தொட்டவர் யாரென்று துணுக்குற்றார்
பெருந்திரளில் யாரென்று தெரியாதென்றனர்