பக்கம்:மேரியின் திருமகன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

இந்த அவலம் ஏசுவை உறுத்தியது
கையிற் சவுக்குடன் கடைகளைப் புரட்டினார்
புறாக்களை பறக்கவிட்டார். போலிகளை விரட்டினார்
குருக்கள் வெகுண்டார். கூலிகள் கொதித்தனர்
இந்த அதிகாரம் ஏதென்று எதிர்த்தனர்
தேவனின் மகன் நான் திருத்த வந்தேன்
செபக்கூடத்தில் திருடர்களுக்கு இடமில்லை
என்றார்
இறைவனுக்கு மகனா என்று எள்ளினர்
ஆதாரத்துக்கு ஒரு அற்புதம் செய்யக்கேட்டனர்
யோனாஸ் மூன்று பகலும் இரவும்
திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து மீண்டார்.
மனுமகனும் மண்ணுக்குள்ளிருந்து வருவார்
இந்தப் பெரிய ஆலயத்தை இடியுங்கள்
மூன்றே நாளில் எழுப்பித் தருகிறேன்
கோயிலைவிட பெரியது இங்கே இருக்கின்றதென்றார்
கோயிலை இடிப்பவன் எனக்குற்றம் சாட்டினர்.

அரசின் பகைக்கு ஆளாக்க விரும்பி
மன்னவர்க்கு வரியா? விண்ணவர்க்கு விழாவா!
எதுசரி என்று இறைமகனைக் கேட்டனர்
நாணயத்தின் ஒருபுறத்தில் ராஜமுத்திரை
மறுபுறத்தில் தெய்வச் சின்னம் இருப்பது காண்க
ஆதலின் அரசுக்குரியது அரசுக்கும்
தேவனுக்குரியது தேவனுக்கே என்றார்
அதுநேரம் தண்டல்காரர் வரிப்பணத்துக்கு வந்தார்
ஆண்டவர் அவர்களுக்கு இடறலாக வில்லை
சீமோனைக் கடலில் தூண்டிலிடச் சொன்னார்.