பக்கம்:மேரியின் திருமகன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ஆண்டவர் ஒரு நாள் ஆலயத்திலிருந்தபோது
தங்கம் வெள்ளி தந்தம் என்று சிலர்
காணிக்கை செலுத்தினர். கைம்பெண் ஒருத்தி
ஒடுங்கி நின்று ஒற்றைக்காசு போட்டாள்
மற்றவர் உபரியில் ஒரு பகுதியை செலுத்தினர்
இவளோ தனக்கென்று இருந்ததைப் போட்டாள்
ஏழையின் காணிக்கையே இறைவனுக்குப் பெரிது - என்றார்

செல்வன் ஒருவன் தேவனிடம் வந்தான்
நல்லவரே நான் உய்யவழி சொல்லுங்கள் என்றான்
இறைவன் ஒருவனே நல்லவன் மற்றபடி
நீ உய்ய பிறர்க்கு இட்டு உண்
என்றார்.
இடாமலே ஒருநாளும் உண்டதில்லை என்றான்
மோயீசன் சொன்ன முறைப்படி வாழ்க என்றார்.
கட்டளைகள் பத்தையும் கடைபிடிக்கிறேன் என்றான்
ஆயினும் ஓர்குறை உன்னிடம் உள்ளதென்றார்
சொல்லுங்கள் திருத்திக்கொள்ளுகிறேன் என்றான்
செல்வம் எங்கேயோ அங்கேதான் உள்ளமிருக்கும்
ஆதலின் உடமைகளை தத்தம் செய்துவிட்டு
எளியவனாய் என் பின்னே வருக
என்றார்.
வாடியது முகம் வந்த வழியே திரும்பினான்
ஆண்டவர் சீடர்களை அழைத்துச் சொன்னார்
வாழ்வுக்கு செல்லும் வாயில் ஒடுக்கமானது
அழிவின் பாதையோ மிகவும் அகன்றது.