பக்கம்:மேரியின் திருமகன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எண்ணம்


கர்த்தரின் பெருமை கடலினும் பெரிது
முன்னம் எத்தனை எத்தனை மொழிகளில்
எத்தனை எத்தனை கவிஞர் எழுதினரோ
இன்னும் எத்தனை எத்தனை மொழிகளில்
எத்தனை எத்தனை புலவர் எழுதுவரோ
எனக்கும் ஓர்உணர்வு எழுதத் துணிந்தேன்,
அட்லாண்டிக் அண்டார்டிக் பசிபிக் என்றே
தனித்தனியே பெயர்பல சொல்லினும் அலைகடலை
பிரித்துப் பிரித்து நிறுத்தியவர் உண்டோ ,
பெருங்கடற் பரப்பும் பேரலையும் ஒன்றே
அங்ஙனே மதங்கள் பலப்பல ஆயினும்
வேதங்கள் சொல்லும் போதங்கள் ஒன்றே
கிழக்கில் கிருஷ்ணன் சொன்னது கீதை
மேற்கில் கிருஸ்துவின் வார்த்தைகள் வேதம்
போதி மரத்துப் புத்தனும் சொன்னான்
மக்க மாநகரில் முகமது முழங்கினார்
நால்வரும் நல்லதல்லால் வேறென்ன சொன்னார்
சடங்குகள் சாத்திரங்கள் வேறுவேறு ஆனாலும்
சத்தியம் ஒன்றே தருமம் தருமமே
ஏசுவின் எண்ணத்தை எழுத்திலே தந்த
மத்தேயு மாற்கு லூக்கா யோவான்
நால்வரைக் கொண்டு வேலனும் சொன்னான்
இளந்தமிழில் ஏசுபிரான் சரிதம்.
வரிக்குவரி தொடர்ந்து படித்தால் உரைநடை
சீர்பிரித்து இசைகூட்டினால் இதுவே கவிதை!