பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை



யர்லாந்தின் விடுதலைப் போரில் மைக்கேல் காலின்ஸின் வீர சரித்திரம் விசேஷமான ஒரு தனிப் பகுதி. கடைசி முறையாக இங்கிலாந்துடன் போர் தொடுத்து வெற்றி பெற்று, அயர்லாந்தில் சுயராஜ்ய ஸ்தாபனம் செய்த தலைவர்களில் முக்கியமானவர் மூவர். இவர்கள் ஆர்தர் கிரிபித், ஈமன் டி'வேலரா, மைக்கேல் காலின்ஸ். கிரிபித் சுதந்திரப் போரின் ஹிருதயம், டி'வேலரா அதன் மூளை, காலின்ஸ் அதன் புஜங்கள் என்று சொல்லலாம்.

கிரிபித் (1872-1922) வயது, அறிவு, அநுபவங்களில் மற்ற இருவரைக் காட்டிலும் முதிர்ந்தவர். வாழ்நாள் முழுதும் அயர்லாந்தின் விடுதலைக்காகவும், மறுமலர்ச்சிக்காகவும் அவர் உழைத்து வந்தார். அவர் பத்திரிகைகளில் எழுதிய வீர வசனங்களும், சரித்திரக் காட்சிகளும், அரசியல் ஆராய்ச்சிகளுமே பல்லாயிரம் வீரர்களைச் சிருஷ்டித்துவிட்டன்; உறங்கிக் கிடந்த ஜனங்களை உஷாராக்கிவிட்டன. பல வருஷங்களாக அரும்பாடுபட்டு அவர் நிறுவிய அடிப்படையைப் பயன்படுத்திக் கொண்டு ஐரிஷ் வீரர்கள் போராடுவது எளிதாயிருந்தது. தாய்நாடு சுதந்திரம் அடையும்வரை அவர் உயிரோடிருந்தார்.

டி'வேலரா (1882) அயர்லாந்தின் சுதந்திரப் போரில் தாமே துப்பாக்கி ஏந்தித் தேசீயத் தொண்டர் படை ஒன்றுக்குத் தலைமை தாங்கி நின்று போராடிய தீரர். 1916-ம் ௵, மற்றும் பல தளகர்த்தர்கள் அரசாங்கத்திடம் சரணடைந்த காலத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மதித்துக் கடைசியாகச் சரணடைந்த தளகர்த்தர் அவரே. அவரைப் பிடிக்க முடியாமல் திண்டாடிய அரசாங்கம், அவர் தாமாக வந்து ஆஜரானதும், அவருக்கு மரண தண்டனை விதித்தது. பின்னால் இத்தண்டனை ஜன்ம தண்டனையாக்கப்பட்டது. 1917-ல் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டதால், அவர் சிறையிலிருந்து விடுதலை அடைந்தார். அதன் பின்பும், வெற்றி காணும்வரை அவர் இடைவிடாமல் உழைத்து வந்தார் ; மீண்டும் மீண்டும் சிறை புகுந்தார். தீர்க்கமான யோசனை, எடுத்த கொள்கையில் உடும்புப் பிடி போன்ற உறுதியான பிடி,