16
முன்னுரை
நாள்தோறும் பெருகிவரும் நம் தேசிய இயக்கம் காரணமாக நாடெங்கும் அறிவுத்தாகம்—இலக்கியப் பசி—ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் தெரிந்த பலர், அதிலுள்ள அவசியமான புது நூல்களைப் படியாமல், தமிழையும் புறக்கணித்து, எல்லாம் தெரிந்ததாக ஒரு மயக்கமும் கொண்டு, ஆங்கிலமும் தமிழும் கலந்த மணிப்பிரவாள மொழியில் பேசிக்கொண்டு கிரிகிறார்கள். ஆனால், கல்லூரி வாயிலேயே எட்டிப் பாராது, ஆங்கிலம் படிக்காத லட்சக் கணக்கான இளைஞர்கள்—தொண்டர்கள், பெண்கள், கடைக் கணக்குப்பிள்ளைகள், தொழிலாளர்கள், குமஸ்தாக்கள், இளம் மாணவர் முதலியோர்—தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறிவுத் தாகத்தினால், கிடைத்ததை எல்லாம் அள்ளி விழுங்கிவருகிறார்கள். கவைக்கு உதவாத 'கற்கோட்டை ரகசியங்கள்,' 'ஆபத்பாத்தவா! அநாத ரக்ஷகா !' என்று ஓலமிடும் நாவல்கள், பெயர் ஊர் தெரியாதபடி ஆங்கிலத்திலிருந்து தமிழில் தழுவல்களாக வரும் சப்பைக் கதைகள் ஆகியவை அவர்கள் மனத்தைக் கவர்வதில்லை. நாம் ஒரு யுக—சந்தியில் இருக்கிரறோம் என்பதை உணர்ந்து, புது யுகத்திற்கு ஏற்ற புது நூல்களைத் தாருங்கள் ! தாருங்கள்!' என்று அவர்கள் எழுத்தாளர்களைக் கேட்கிறார்கள். அந்த முறையில் இந்த நூல் கொஞ்சம் உதவி செய்வதாலேயே இதற்கு வரவேற்புக் கிடைப்பதாக நான் கருதுகிறேன்.
நம் நாடு வெகு சீக்கிரத்தில் பூரண சுயராஜ்யம் அடையப் போகிறது. இந்த நிலையில் உயர்ந்த தியாகியாகிய காலின்ஸின் இந்தச் சரித்திரத்தை, ஒன்பது வருஷங்களுக்குப் பின், இரண்டாம் பதிப்பாக இப்போது வெளியிடுகிறேன். 1932-34 ல் சிறையில் என்னைச் சூழ்ந்து உட்கார்ந்து, நான் எழுதிக் கொடுத்த தாள்களை ஆவலோடு படித்துக்கொண்டிருந்த சைலப்ப பிள்ளை, சேதுப் பிள்ளை, திருமலைக்கொழுந்து★ , முத்தையா தொண்டைமான், ராஜம்பிள்ளை, கைலாசத் தேவர்★, நடராஜபிள்ளை முதலிய நண்பர் பலருடைய ஆசை முகங்கள் எல்லாம் அன்று போல் இன்றும் என் கண்முன்பு மலர்ந்தே யிருக்கின்றன.
இந்த இரண்டாம் பதிப்பைத் தாமே வெளியிட வேண்டும் என்று உறுதிகொண்டு, உயர்ந்த முறையில் இதை அச்சிட்டுத் தயாரித்துள்ள தமிழ்ச் சுடர் நிலையத்து அதிபர் நண்பர் ஸ்ரீ. கோபாலனுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னலும் தகும்.
| சென்னை 7—3—'47 |
ப ராமஸ்வாமி |
★ இப்போது சுவர்க்கவாசிகள்.