பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மைக்கேல் காலின்ஸ்

என்று பூரண சுயேச்சைவாதிகள் கருதியிருந்தனர். ஆனால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. 1914-ல் இங்கிலாந்து ஜெர்மனியோடு பொருதும் பொழுதாவது அயர்லாந்து அடிமைத்தனத்தை எதிர்த்துத் தன் 'ஆயுதம் தாங்கிய ஆட்சேப'த்தைத் தெரிவிக்க வேண்டும் என்று தொண்டர்கள் தீர்மானித்தார்கள். ஒவ்வொரு தலைமுறையும் அந்நிய அரசுக்கு எதிராகப் போரிட்டிருக்கையில்,அவர்கள் தலைமுறை மட்டும் விணாய்க் கழியக்கூடாது என்று கருதினார்கள். ஜெர்மானியரை அயர்லாந்தின்மேல் படையெடுத்து வரும்படி அவர்கள் கேட்கவில்லை. ஆனால் அவர்களிடமிருந்து ஆயுத உதவி கோரினர். அச்சமயத்தில் மகத்தான தியாகங்களைச் செய்யாவிட்டால், பூரண சுயேச்சைக் கொள்கையை ஜனங்கள் மறந்துவிடக்கூடும் என்று அவர்கள் துணிந்தார்கள். அதே சமயத்தில் ஜனங்கள் எப்படி இருந்தார்கள் என்றால், ஆங்கிலக் கொடியின் சின்னங்களை அணிந்து ராஜ வாழ்த்துப் பாடிக்கொண்டிருந்தார்கள் ! அரசியல் தலைவர்கள் யுத்தத்தில் இங்கிலாந்துக்கு வெற்றி வாங்கிக் கொடுப்பதே அயர்லாந்தின் மதக் கடமை என்று பறை சாற்றி வந்தனர்! பத்திரிகைகளிலெல்லாம் ஆங்கிலப் படைகளையும் ஆங்கில ஜனங்களையும் பற்றி பத்திபத்தியாகப் புகழுரைகள் வெளிவந்தன. இந்த இருள்-பிழம்பினூடே தொண்டர்கள் மட்டும் உறுதி கலையாமல் இருந்தனர். தொழிற் சங்கத்திலிருந்து இருநூறு தொண்டர்கள் அவர்களுக்கு உதவியாக வந்தனர். தொண்டர்களுக்குள்ளே எழுச்சியைப்பற்றி மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அவர்கள் தலைவர்களுக்குக்கூட என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவிக்கவில்லை. எல்லாம் இரகசியமாகவே இருந்தது.