பக்கம்:மொழியின் வழியே.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மொழியின் வழியே

'கொன்றும், குலைத்தும், குருதியுழக்கியும் குற்றுயிரும், குலையுயிருமாய்ப் பாழ்படுத்தியும் பகைவர் படையினைச் சூறையாடி, முறியடித்து, வீழ்த்தி வீறு கொண்டு மேலெழுந்து வெற்றி முழக்கி நின்று பூரிக்கும் எம் மன்னவன் வாழ்க! என்று வாழ்த்தப் புலவர் குழுமினர். வினையெச்சங்கள் வாக்கியப் பொருள் வேகத்தைத் தடுத்து நிறுத்தி அழகைக் கெடுப்பதை இதில் காண்கின்றோம். நடந்து போய்க் கொண்டிருக்கிற மனிதன் ஒருவனைப் பத்தடிக்கொருமுறை காலை இடறிக் கீழே தள்ளுவதுபோல் ஒவ்வொரு வினையெச்சத்திலும் இடறி விழுந்து தடுமாறுகிறது பொருளுணர்ச்சி. இருபதாம் நூற்றாண்டு வாழ்க்கையில் ஆடையணிகளிலிருந்து தலைமயிர் உள்பட எல்லாம் சுருக்கமாக இருப்பதுதான் அழகென்று கருதப்படுகிறது. வாக்கியம் மட்டும் நீண்டு நாகரித்தைப் புறக்கணிப்பானேன்? சிறுகதை, சிற்றுண்டி, சிறு சேமிப்பு, சிறு தொழில் வளர்ச்சி, சிறு பான்மையினர் - என்று சுருக்கத்தை ஒவ்வொரு துறையிலும் தேடுகிற நாம் உரைநடையிலும் அதைத் தேடுவதில் தவறில்லையே! - O