பக்கம்:மொழியின் வழியே.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 17

மொழி. மொழியுணர்ச்சியற்ற மக்கள் வாழ்கின்ற நாடு நாகரிகத்திலோ, அறிவு வளர்ச்சியிலோ பண்படவே முடியாது. மொழிப்பற்றின்றி விழிப்பற்றுக் கிடக்கும் மக்கள் விலங்குகளினும் இழிந்தவர். தாய் மொழியை எண்ணி எண்ணி ஏற்றமுறவும் முன்னேற்றவும் மறந்துவிடுகின்ற சமுதாயம் வாழத் தகுதியற்றது. தாய்மொழியில் பிழையற எழுதவும் பேசவும் தெரியாதவர்கள் கடமை தவறிவிட்டவர்கள்; கடமையை மறந்தொழிந்தவர்கள். தாய் மொழியை வளரச் செய்வது பெற்ற தாய்க்கு உற்ற துணையாய்த் தொண்டு செய்து பேணுவது போன்றது. பெற்ற தாய் தாலாட்டிப் பாலூட்டிச் சீராட்டி வளர்ப்பாள். மொழித்தாய் எழுத்துட்டி, மொழிகாட்டிப் புகழ் நாட்டுவாள். உழைப்பாளி முதல் செல்வர் வரை யாவராயினும் சரி, மொழித் தாய்க்குப் புதல்வரே. புதல்வர் பத்துத்திங்கள் சித்தம் குளிரச் சுமந்து பெற்ற உத்தமத் தாயை மறத்தல் மாயாப் பெரும் பழியாய் ஒயாது வருத்துமன்றோ? பிழையற எழுதுதல், பிழையறப் பேசுதல், மரபு குலையாது நூலியற்றல், தான்தோன்றிகளாகாது, ஆன்றோர் சென்ற நெறியைப் பாதுகாத்தல், புதிய முறையைப் பழைய முறைக்குக் கேடின்றி, ஏற்றுக் கொள்ளுதல் முதலிய செயல்களாலல்லவா ஒரு மொழி முன்னேற முடியும்? கடவுளைப்பற்றி ஆராய்வார்க்கும் அறிய முடியாத பேராற்றல் வாய்ந்தவராக அவர் திகழ்வதுபோல் மொழியும் தனது பொருட்காரணம் தோன்றாது நிற்கும் பெருமைசால் பேராற்றல் வாய்ந்தது. 'மொழிப் பொருட்காரணம் விழிப்பத் தோன்றா' என்று பேராசிரியர் தொல்காப்பியர் இந்த உண்மையை வெளிப்படுத்துகிறார். எனவே மொழி என்பது ஆதியந்தமற்ற கடவுளைப் போன்றது என்ற கருத்து மீண்டும் வலியுறுத்தப் படுகிறது. -

ஆகவே, மொழி பக்தியோடு பேணி வளர்த்தற்குரியது. வளர்க்கும் மக்கள் இறைவன் அடியவர்கள் போல்வார் ஆவர்.

மொ - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/19&oldid=621364" இலிருந்து மீள்விக்கப்பட்டது