பக்கம்:மொழியின் வழியே.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 41

பணத்தைப் பண்படுத்திப் பயன்படுத்தி வாழ முடியும். பணம் ஒன்றே துணையாக வாழ்வார்க்குப் பணமே கழுத்தையறுக்கும் கொழுத்த எமனாக அமையும். என்றும் நின்று நிலைக்கும் ஒன்று கேள்விச் செல்வத்தால் வரும் அறிவே. அறிவுடையார்க்குப் பணக் குரங்கை ஆட்டுகின்ற வித்தை நன்றாகத் தெரிந்த ஒன்று. செவிச் செல்வம் மனிதனைப் பண்படுத்தி விடுகின்ற கடமையைத் தனதாகக் கொண்டிருக்கிறது. பண்பட்ட மனமும் நாகரிக அமைதியும் கேள்விச் செல்வத்தாலே வளருவது போலப் பொருட் செல்வத்தால் எனைத்தும் வளர்வதே இல்லை. கேள்வி மனிதனைப் பண்படுத்துகிறது. பணம் மனிதனைப் புண்படுத்துகிறது. முன்னது என்றும் அழியாது நின்று தளர்வு வந்த காலத்தும் கிளர்வு நல்கும் தோன்றாத் துணையாக அமைகிறது. பின்னது தான் இருக்குங்காலத்தில் மட்டுமின்றி இழக்கப்படுங் காலத்திலும் வறுமைத் துன்பத்தையும் கழிவிரக்கத்தையும் பெருகத் தருவதற்குத் தவறுவதில்லை. ஒன்று நன்று ஆராய வேண்டும். துன்பம் மனிதனைப் பண்படுத்துகிற அளவு இன்பம் மனிதனைப் பண்படுத்த முடிய வில்லை. துன்பம் வாழ்க்கையின் எல்லா அனுபவங்களையும் மனிதனுக்குக் கொடுக்கிறது. இன்பம் அனுபவங்களை ஏற்படாது கெடுக்கிறது. முன்னது மனிதனை எச்சரிக்கிறது. பின்னது எச்சரிக்கத் தவறிவிடுகிறது. இதே வேறுபாடுதான் - செவிச் செல்வத்திற்கும் புவிச் செல்வத்திற்கும் இடையேயும் உள்ளது. ஒன்று வாழ்க்கை அனுபவத்தைத் தருகிறது. மற்றொன்று தருவதற்குத் தவறிவிடுகிறது. பிறசெல்வங்கள் நிலையானவை அல்ல. இது நிலையான பெருஞ்செல்வம். பிற செல்வங்கள் இறுதியில் விளைப்பது துன்பத்தையே ஆகும். இஃது எக்காலத்தும் இன்பத்தையே தன்னால் பிறருக்கும் தனக்கும் விளையச் செய்கிறது. ஆக இதுவரை கூறிய கருத்துக்களால் செல்வத்துட் செல்வம் என்பது வெள்ளிடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/43&oldid=621388" இலிருந்து மீள்விக்கப்பட்டது