பக்கம்:மொழியின் வழியே.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 47

ஆட்சியும் வேண்டுமல்லவா? முறையும் சொற்பொருள் ஆட்சியும் படைப்பவனின் விருப்பத்திற்குரியவை என்றாலும் நுகர்பவர்களின் வெறுப்புக்குரிய முறையில் மரபு மீறிய தன்னுரிமையைப் படைப்பவன் நிலைநாட்ட முயலுதல் கூடாது. காலமே எதிர்க்கும் முழுப் பெருங் குற்றமாக உயர்ந்து விடும் இந்தச் செயல்.

"எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்

செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே' என்று சொல்மரபுக்கு வரையறை கண்டனர் முன்னோர். காலத்தாலும், சூழ்நிலையாலும் இன்னும் எத்துணைப் பல கோடி ஆண்டுகள் சென்றாலும் இந்த விதியை நிர்மூலமாக்கி விட முடியாது. சிறிது மாறுபாடு செய்வதற்கு வேண்டுமானால் முடியலாம். காலம் என்ன அவ்வளவு ஆற்றல் வாய்ந்ததா?' என்றால் மரபின் விட்டுக் கொடுக்கும் இயல்புதான் காலத்தின் ஆற்றல் மரபு மட்டும் விதித்த விதியாக வளைந்து கொடாது நின்று விடுமானால் காலம் அதை என்னதான் செய்துவிட முடியும்?

மரபு வழுக்கள்

‘தென்றல் காற்று அடிக்கிறது (வீசுகிறது), பூவைப் பிடுங்கினான் (கொய்தான்), சோறு போட்டான் (படைத்தான்), நல்ல பெண்களுக்குள்ளே இவளும் ஒருவள் (ஒருத்தி) - என்றெல்லாம் பேச்சிலும், எழுத்திலும், பாட்டிலும், வசனத்திலும், உணர்வுபெருகி அறிவுகுறைந்த ஆகுலத் தன்மை படைத்தவர்கள் மரபுவழுக்களை வளர்க்கிறார்கள். மொழியின் உயிராற்றலை உருக்குலைக்கும். இத்தகைய மரபுப் பிழைகளைக் காலம் உண்டாக்கிக் கொடுத்தால் யார் என்ன செய்ய முடியும்? தென்றல், பூ என்ற சொற்களின் மென்மை கவின், அடிக்கிறது, பிடுங்கினான் என்ற பொருத்தமற்ற வினைச் சொற்களால் அழகிழந்து போகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/49&oldid=621394" இலிருந்து மீள்விக்கப்பட்டது