பக்கம்:மொழியின் வழியே.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மொழியில் ஒப்புநயம்

மிகச் சிறிய குறட்பாவிலும் உவமைகளை நயம்பட அமைக்கும் திறனைத் திருவள்ளுவர்பால் காணலாம். அவர் கூறும் உவமைகள் யாவும் திரண்டு தெருண்ட செறிவும் நுணுக்கமும் பொருந்தியவையாக இருக்கும். தாம் கூற வந்த பொருளை நன்கு விளக்குந் திறன் பெற்ற உவமைகளையே கூறுவார் வள்ளுவர். அணி அலங்காரங்களுக்காக அகப்பட்ட வற்றையெல்லாம் ஒப்புக்காட்டும் வேடிக்கைக் கவிவாணர் செயலை அறவே வெறுப்பவர் அவர் என்றுகூடச் சொல்லலாம். பொருளை விளக்குகின்ற ஆற்றலும் பயனும் இல்லாத உவமைகளை அவர் ஒரு போதும் கூறார். கருத்துக்கு விளக்கம் கூறும் இன்றியமையாத நிலை ஏற்படுமானால் ஒரே உவமையையே இரண்டு மாறுபட்ட பொதுத்தன்மைகளை யுடைய இரண்டு வேறு உவமைகளாக ஆக்கிக் கூறும் அருங்கலைத்திறனும் வள்ளுவனாரிடம் உண்டு. அத்தகைய அருங்கலைத் திறன் அவரியற்றிய நூலுள் அமைந்துள்ள மையைக் குறிப்பிட்டு விள்க்குவதுதான் இக்கட்டுரையின் நோக்கம். உடம்பிற்கும் உயிருக்குமுள்ள தொடர்பை வள்ளுவர் இரண்டிடங்களில் உவமையாகக் கூறியுள்ளார். உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்பின் நிலை யாமையை வேறொரு விதமாக உவமை கூறி விளக்குகிறார் வேறொரு குறளில், ஒருவனுக்கும் ஒருத்திக்குமுள்ள காதலை விளக்குவதற்கு உடம்பிற்கும் உயிருக்குமுள்ள தொடர்பை நிலைத்ததாக உவமை கூறுகிறார் மற்றொரு குறளில். இவ்விரண்டு உவமைகளில் பொதுத்தன்மை வேறுபடுதல் வெளிப்படையாக விளங்கும். ஒன்றில் நிலையாத தொடர் பின்மை'யையும் மற்றொன்றில் நிலைத்த தொடர்பையும் பொதுத்தன்மைகளாகப் பொருத்தி இவ்விரு உவமைகளையும் மொ - 5 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/67&oldid=621412" இலிருந்து மீள்விக்கப்பட்டது