பக்கம்:மொழியின் வழியே.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மொழியின் வழியே!

இவ்விரண்டு உவமைகளும் வள்ளுவர் கலைத் திறனை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளன. இக்குறள்களின் விளக்கவுரையில் ஆசிரியர் பரிமேலழகர் சுருக்கமான முறையில் இவைகள் ஒன்றோடொன்று மாறுபடாத நயத்தைக் கூறியிருக்கிறார். ஒன்று துறவுலகம். மற்றொன்று காதலருலகம். இரண்டிலும் அமைந்த உவமையியல்பு மாறு படாத முறையில் அதற்கு மேற்பட்ட பொருட் சிறப்பையும் காணும்படி செய்திருக்கிறார் வள்ளுவர். ஒருவனுக்கு நிலை யாமையை அறிவுறுத்த வேண்டும். மற்றொருவனுக்கு நிலைத்த காதலை அறிவுறுத்த வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்திக் கல்லையும் திரும்பத் தான் பெற்றுவிடுவதுபோல ஒரே கருத்தை இரண்டுவமைகளாக்கிக் குற்றமும் அணுகாமல் காத்துக்கொள்கிறார் வள்ளுவர். நிலையாத உடம்பினைக் கருவியாகக் கொண்ட துறவிக்கு அவ்வுணர்வு மறவாது, தான் முயலவேண்டியது கடனாகின்ற தன்மையை அவ்வாறு உணர்த்தினார். ஈருடல் ஒருயிராகக் கலந்த ஒருமையுணர்ச்சியை இவ்வாறு உணர்த்தினார். கல் ஒன்றுதான். வீழ்ந்த மாங்காய்கள் இரண்டு. இது வள்ளுவர் திறமைக்கு ஒரு மணிமுடி சூட்டி வைக்கிறதல்லவா?

வள்ளுவர் நூல்ைத் திரும்பத் திரும்பப் படிக்கும்போது புதிய புதிய நயங்கள் காண்கிறோம். மலைப்பு ஏற்பட்ட பிறகு தான் உண்மை மலைபோலக் கண் முன்னே தோன்றுகிறது. 'இரண்டு உவமைகளை வள்ளுவர் இவ்வாறு புணர்த்துக் கூறியது தகுமா? என்ற மலைப்பு ஏற்பட்டது. அதற்கு விடை இவ்வளவு விரிந்துபோயிற்று. வெறும்விடையாக மட்டும் அமைந்து விடவில்லை. ஐயத்தைப் போக்கி அரிய நயத்தையும் காணும்படி செய்துவிட்டது அந்த மலைப்பு. 亡

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/70&oldid=621415" இலிருந்து மீள்விக்கப்பட்டது