பக்கம்:மொழியின் வழியே.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மொழியின் வழியே!

நாடகத் தமிழின் இலக்கணத்தையும் முறைகளையும் இக்காலத்திலும் அறிந்துகொள்ள ஏற்ற விதத்தில் உயர்தரமான நூல்களை எழுதி அளித்துள்ளனர் இரு பெருமக்கள். 'நாடக வியல்’ என்னும் நூலை எழுதிய பரிதிமாற்கலைஞரும், 'மதங்கசூளாமணி’ என்னும் நூலை எழுதிய விபுலானந்த அடிகளும் என்றும் தமிழர்களின் நன்றிக்கு உரியவர்கள். ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகிய மூன்று மொழி நாடக இலக்கிய வளத்தையும் ஒப்பு நோக்கி எழுதப்பட்ட நூலே மதங்கசூளாமணி, மதுரைத்தமிழ்ச்சங்கத்தினரால் வெளியிடப் பெற்ற இவ்வரிய நூல் இப்போது பதிப்பற்றுப் போனமை தமிழர்க்கு இழப்பே யாகும்.

இனி நூல்களும், நாடகக் கதைகளும் எழுதியதோடு அமையாமல், நடித்தும், நாடகக் கலையை வளர்க்கப் பல்லாற்றானும் பாடுபட்டவர்கள் சிலரை நினைக்க வேண்டும். சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், நவாப் இராசமாணிக்கம், இன்று டி. கே. எஸ். சகோதரர்கள், சேவா ஸ்டேஜ்காரர்கள், போன்ற பலர் நாடகக் கலையை வளர்த்து வருகிறார்கள்.

ஆயினும் தமிழ் நாடகக் கலை இன்னும் மேல் நிலையைப் பெறுவதற்கு முயன்று கொண்டே இருக்க வேண்டும். நாடகத்துக்கென்றே அமைந்து நாள்தோறும் பல ஆயிரம் திரட்டித் தரும் நாடக அரங்கங்கள் கல்கத்தா நகரத்தில் இருப்பதுபோல் சென்னை, மதுரை முதலிய தமிழ் நகரங்களில் ஏற்பட வேண்டும். நாடகத்தில் நடிக்கும் நடிகர்களின் ஏழ்மையும், வாழ்க்கைத் தொல்லைகளும் குறைந்து வாழ்க்கைத் தரமும், வசதியும் பெருக வேண்டும். நாடக மேடை அரங்க நிர்மாணத்துக்குப் புதுமையான பல நவீன சாதனங்களையும், உத்திகளையும் மேற்கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/82&oldid=621426" இலிருந்து மீள்விக்கப்பட்டது