பக்கம்:மொழியின் வழியே.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மொழியின் வழியே!

முடியும் என்ற நம்பிக்கை படிக்கிறவர்களுக்கும் ஏற்பட்டு விட்டது. - - *

ஈழத்திலும் தமிழ்நாட்டு வார மாத இதழ்களிலும் உரைநடையில் நல்ல கருத்துக்களைக் கொண்ட சிறுகதைகளை அடிக்கடி காண்கிறோம். ஒரு நல்ல சிறு கதையை நன்றாக எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு ஈடு கூறலாம். குறிப்பிட்ட காட்சியைக் குறிப்பிட்ட விநாடியில் உள்ளது உள்ளபடி எடுத்துக்காட்டும் புகைப்படக் கருவி போல ஒரு குறித்த நிகழ்ச்சியை ஒரு குறித்த நோக்குடன் (Theme) விவரித்து முடிப்பது சிறுகதை. ஒவியன் ஒவியத்தில் தன் கை விரும்பிய வண்ணமெல்லாம் புனைந்து பொலிவுகாட்டலாம். புகைப் படத்தில் அப்படிச் செய்ய முடியுமா? ஒரு நல்ல சிறுகதை அளவு மீறிய நிகழ்ச்சிகளைப் புனைந்து கதைப்போக்கின் ஒருமைப்பாடு குன்றுமாறு செய்யுமானால் அதை எங்ங்னம் சிறுகதை என்பது? அம்பு பாய்வதுபோல் நேரே பாய்ந்து சென்று நிகழ்ச்சியின், மையக் கருத்திலே படிக்கும் உள்ளம் பொருந்துமாறு சிறுகதை முடிவு பெற வேண்டும். புதிய சிறு கதையின் மரபும் இதுதான். உலகத்துச் சிறு கதைகளின் வெற்றிக்குக் காரணமும் இதுதான்.

மாதம் ஒன்றிற்கு ஏறக்குறைய இருநூறு சிறுகதைகளுக்குக் குறைவில்லாமல் தமிழ் நாட்டு இதழ்களில் வெளிவருகின்றன. எண்ணிக்கையின் பெருக்கத்தைக் கொண்டு மட்டும் பார்த்தால் இது வளர்ச்சியாகலாம். தமிழ் மரபோடு கூடிய நடை, என்றும் நிலைத்து நிற்கக்கூடிய உண்மை (Eternal Truth), சிறு கதை அமைப்பிற்கு இயைந்த போக்கு, என்று மூன்று வகையால் சமன் செய்து சீர்தூக்கிப் பார்த்தால் மாதத்திற்குப் பத்துக் கதைகளாவது தேறும்.

தமிழில் சிறுகதை இலக்கியத்திற்கு முதலில் வித்திட்டு வளர்த்த பெருமக்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு இன்றைய நிலையைக் காண்போம். உருவாகிக் கொண்டிருக்கின்ற, இனி மேல் உருவாகப் போகும் நல்ல சிறுகதையாசிரியர்களுக்கும் நாம் வணக்கம் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/86&oldid=621430" இலிருந்து மீள்விக்கப்பட்டது