பக்கம்:மொழியின் வழியே.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. மொழியும் புதின வளர்ச்சியும்

நோக்கம்

தமிழ் மறுமலர்ச்சி இலக்கியத்தின் வளர்ச்சியால் நாம் அடைந்துள்ள பெரும் பயன்களில் இரண்டை முக்கியமாகக் குறிக்கலாம். சிறுகதை, நாவல் என்னும் இரு துறைகளும் இந்தச் சில ஆண்டுகளில் ஒருவாறு தமிழ் மொழியைச் சற்றே வளப்படுத்தி யிருக்கின்றன என்று மறுப்பின்றி ஒப்புக் கொள்வதில் பிழையில்லை. ஆனால், இந்த வளத்தில் வளர்ச்சியின் பங்கு எவ்வளவென்று பார்க்கவேண்டும்.

நாவலுக்கும், சிறுகதைக்கும், அமைப்பில் எத்துணையோ வேறுபாடுகள் உள்ளன. சிறுகதையை வாழ்க்கை மாளிகையின் ஒரு சிறிய பலகணி என்று கூறினால் நாவலை மாளிகையின் பூரண அம்சம் என்றே சொல்ல வேண்டும். காவியத்திற்கும் தனிச் செய்யுளுக்கும் இடையிலுள்ள வேறுபாடுதான் நாவலுக்கும், சிறு கதைக்கும் உள்ள வேறுபாடு. கவி உள்ளமும், உயர்ந்த நோக்கங்களும், சிறந்த நடை நலமும் உள்ள ஆசிரியன் எழுதிய நாவலை ஒரு வசன காவியம் என்று சொல்லிவிடலாம். எல்லா நாவல்களையும் வசன காவியம் என்று சொல்லமுடியாது. பொழுது போக்கு நாவல்கள், இலட்சிய நாவல்கள், துப்பறியும் நாவல்கள், என்று தமிழ் நாவல்களை மூன்று வகைக்குள்ளே அடக்கி விடுவது பொருந்தும். இந்த மூவகை நாவல்களிலும் தமிழ் நாவலாசிரியர், தமிழ்நாட்டு வாசகர்கள் ஆகிய இரு - சாராரும், எந்த அளவில் எழுதியும், படித்தும் வளர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை ஓரளவு விவரித்துக்கூறி முடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/90&oldid=621434" இலிருந்து மீள்விக்கப்பட்டது