பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

மொஹெஞ்சொ - தரோ


செய்குளத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட தென்பதை உணர்தல் வேண்டும். இவ்வரிய பொருளை அந்நெடுந்துர நாட்டினின்றும் கொணர்ந்து அமைக்கப்பட்ட இச்செய்குளம், ஒரு குறிப்பிட்ட நற்காரியத்திற்காகவே பயன்பட்டதாதல் வேண்டும் என்பதும் அறியத்தகும்.

குளத்திற்கு வடக்கே

இச்செய்குளத்திற்கு வடக்கே எட்டு அறைகள் கட்டப் பட்டுள்ளன. அவை மிக்க உறுதியான சுவர்களைக் கொண்டவை: வெளியிலிருந்து பார்ப்பவர் உட்புறத்தைச் சிறிதும் காணாதவாறு இயன்ற உறுதியான கதவுகளை உடையவை; மேலே ஏறப் படிக்கட்டுகளை உடையவை. ஒவ்வோர் அறையின் மேலும் அறை இருந்ததென்பதற்கு உரிய அடையாளங்கள் காண்கின்றன. மேல் அறையில் இருந்தவர் படிக்கட்டுகள் வழியே உட்புறமாகவே கீழ் அறைக்கு வந்து, அருகில் உள்ள கிணற்றிலிருந்து சேவகன் சேமித்து வைக்கும் நீரில் நீராடிவிட்டு மேலே போய்விடுவர். அவ்வழுக்கு நீர் ஒவ்வோர் அறையிலும் உள்ள துளை வழியே வெளியில் உள்ள கழிநீர்க் கால்வாயைச்சேரும். இவ் அறைகளில் வாழ்ந்தவர் சமயச்சார்புடைய பெருமக்களாக இருத்தல் வேண்டும். இவ்அறைகளும் இச்செய்குளமும் ஸ்தூபி நிற்கும் இடத்திற்கு அண்மையில் இருக்கின்றன. ஆதலால்,ஸ்துாபியின் அடியில் மறைந்துகிடப்பது, இவ்விரண்டிற்கும் தொடர்புடைய கோவிலாகவோ அன்றிச் சமயச் சார்புடைய பிறிதொரு கட்டிடமாகவோ இருத்தல் வேண்டும்[1]

குளத்திற்கு நீர் வசதி

இச்செய்குளத்திற்கு அருகே, இதில் நீரை நிரப்புதற்கென்றே அமைந்தன போல மூன்று பெரிய கிணறுகள் உள்ளன. அவற்றின் நீரே குளத்திற்குப் பயன்பட்டிருத்தல் வேண்டும். குளத்து நீர் தூய்மை அற்றவுடன் அப்புறப்படுத்தப்படல் வேண்டும் அன்றோ? அதற்காகவே இச்செய்குளத்தின் மூலை ஒன்றில் சதுர வடிவில்


  1. Dr.Mackay’s ‘The Indus Civilization’, pp.57, 58.