பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிணறுகள் - செய்குளம் - செங்கற்கள்

89


மாகாணத்தில் இம்முறை நிரம்பக் கையாளப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

செங்கற்களின் அளவுகள்

மொஹெஞ்சொ-தரோவில் இருந்த செங்கல் அறுக்கும் தொழிலாளர் மதிநுட்பம் வாய்ந்தவராதல் வேண்டும். அவர்கள் ஒவ்வொரு செங்கல்லையும் அதன் பயனுக்கு ஏற்றவாறு செய்துள்ளனர். ஒவ்வொன்றும் கோணலும் மேடுபள்ளங்களும் இன்றி நன்றாய் அறுக்கப்பட்டுச் சமனாக்கப்பட்டுள்ளது. சூளையிடப்பட்ட செங்கற்கள் பதமறிந்து சூளையிடப் பட்டுள்ளன. ஒவ்வொரு செங்கல்லும் ஏறக்குறைய நீளத்திற் பாதி அகலமும் அகலத்திற் பாதி உயரமும் (1 : ½ : ¼) உடையதாக அமைந்திருத்தல் பெரிதும் வியக்கத்தக்கது. இவ்வளவில் அமைந்துள்ள செங்கற்களே பலவாகும். கழிநீர்ப் பாதைகட்குச் செய்யப்பட்ட கற்களும் பிற குறிப்பிட்ட காரியங்கட்கென்று செய்யப்பட்ட கற்களும் அளவிற் பெரியனவும் சிறியனவுமாக இருக்கின்றன; அவற்றுள் சில 55 செ. மீ நீளமும் 28 செ. மீ. அகலமும் 7.5 செ.மீ. உயரமும் உடையவை; சில 5 செ. மீ. நீளமுடையவை; சில 23 செ. மீ. நீளமுடையவை. இச்செங்கற்கள் தேவைக்கு ஏற்ற வடிவில் செய்யப்பட்டவை ஆகும். சில சம சதுரமாக இருக்கின்றன; சில நீள சதுரமாக உள்ளன; சில வளைவாகவே இருக்கின்றன; சில கண்ணாடிபோல வழ வழப்பாக்கப்பட்டுள்ளன. சில மூலைகளுக்கு ஏற்ப முக்கோணமாக வெட்டப்பட்டுள்ளன. “ஆரியர் இந்தியாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன் இந்தியாவில் நாகரிகம் என்று ஒன்று இருந்ததே இல்லை” என்று நினைத்தவரும் பேசியவரும் எழுதியவருமே வியக்குமாறு இச்சிந்துப் பிரதேச நாகரிகம் செங்கற்களிலும் சிறந்து விளங்குகின்றது எனின், இப்பிரதேசத்துப் பண்டைப் பெருமையை என்னென்பது!