பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7. வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும்

வீட்டுக்குரிய பொருள்கள்

மொஹெஞ்சொ-தரோ மக்கள் தங்கள் வாழ்விற்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் பெற்றிருந்தனர் என்பது அங்குக் கிடைத்துள்ள பொருள்களிலிருந்து நன்கறியலாம். அப்பொருள்கள் களிமண்ணாலும் மரத்தாலும் செம்பாலும் வெண்கலத்தாலும் சங்கு, வெண்கல் முதலியவற்றாலும் செய்யப் பட்டவை. வீட்டுக்குரிய பெரும்பாலான பொருள்கள் களி மண்ணாற் செய்யப்பட்டனவே ஆகும். சிறப்புடை நாட்களில் சங்காலும் வெண்கல்லாலும் செய்யப்பட்ட பொருள்கள் பயன்பட்டிருக்கலாம் என்று அறிஞர் அறைகின்றனர். மட்டாண்டப் பொருள்களே மிகுதியாக இருத்தலின், அவற்றைப் பற்றி முதற்கண் பேசுவோம்.

மட்பாண்ட மாண்பு

எந்த இடத்தில் நிலத்தை அகழ்ந்து ஆராய்ச்சி செய்யினும், அங்குக் கிடைக்கும் பலதிறப்பட்ட பொருள்களுள் ஆராய்ச்சியாளர் மட்பாண்டங்களையே சிறந்தவையாக மதிக்கின்றனர். ஒரு நகரம் அழிவுறும்போது-துறக்கப்படும்போது அந்நகரத்தார் விட்டுச் செல்வன மட்பாண்டங்களே ஆகும். பிறர் படையெடுப்பினாலும் சேதமாகாதனவும் கவரப்படாதனவும் மதிக்கப்படாதனவும் மட்பாண்டங்களே ஆகும். இவ்விரு காரணங் களாலும் அம்மட்பாண்டங்களும் அவற்றின் சிதைவுகளும் அந்நகர மக்களின் உண்மைநாகரிகத்தை உள்ளவாறு உணர்த்துவனவாகும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து, அவையே அம்மக்களின் காலம், அறிவு, ஆற்றல் இன்ன பிறவும் உண்மையாக உணர்த்தும் ஆற்றல் உடையன. இக்காரணங்களாற்றான் சிந்துப்பிரதேச ஆராய்ச்சியாளர், சிந்துப் பிரதேசத்தில் உள்ள பல இடங்களிற்