பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

மொஹெஞ்சொ - தரோ


பிற பொருள்கள்

கதாயுதம் போன்று சாம்பல் நிறக் கல்லால் செய்யப்பட்ட ஒரு கருவி மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்தது. கல் ஊசி, எலும்பு ஊசி, கற்கோடரி, செம்பு அரிவாள், மரக்கட்டில்கள், ! நாணற்பாய்கள், கோரைப்பாய்கள், மேசைகள், நாற்காலி போன்ற உயர்ந்த மரப்பீடங்கள் முதலியன இருந்தமைக்குரிய குறிகள் காணப்படுகின்றன. சுருங்கக் கூறின், மொஹெஞ்சொ-தரோவில் இல்லத்துக்குரிய எல்லாப் பொருள்களும் குறைவின்றி ஒருவாறு அமைந்திருந்தன என்று கூறுதல் பொருந்தும்

விளையாட்டுக் கருவிகள்

மொஹெஞ்சொ-தரோவில் வாழ்ந்த குழந்தைகள் பயன்படுத்திய விளையாட்டுக் கருவிகள் பலவாகும்: மண் கொண்டு செய்யப்பட்ட விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன, ஆண்பெண் பதுமைகள், சிறு செப்புக்கள் முதலியன நிரம்பக் கிடைத்துள்ளன. குச்சி ஒன்றில் கயிறு இணைக்கப் பட்டுள்ளது. அக்கயிற்றை அசைத்தற்கு ஏற்றவாறு அக்குச்சி மீது பறவை ஒன்று ஏறுவதும் இறங்குவதுமாக இருத்தற்குரிய வசதியோடு கூடிய கருவிகள் சில கண்டெடுக்கப்பட்டன. சிந்துப் பிரதேச வேட்கோவர் இப்பொருள்களைச் செய்வதில் காட்டியுள்ள திறமை பெரிதும் வியப்புக்குரியதாகும். அப்பெரு மக்கள் 1.5 செ. மீ. உயரத்திலும் அழகு மிகுந்த பொருள்களைச் செய்துள்ளனர் எனின், அவர்தம் பண்பட்ட தொழிற் சிறப்பை என்னெனப் பாராட்டுவது இச்சிறிய பொருள்களும் ஒழுங்காகவும் வெளிப்புறம் மினுமினுப்பாகவும் எழில் மிகுந்து காணுமாறு செய்யப்பட்டுள்ளமை இக்காலத்தார் பாராட்டுதற்கு உரியதேயாகும். தொழிலாளர் சங்கு தந்தம், கிளிஞ்சல் ஒடுகள், எலும்புகள் முதலியவற்றாலும் விளையாட்டுப் பொருள்களைச் செய்துள்ளனர். இத்தகைய பொருள்கள் சிந்துப் பிரதேசத்தில் புதையுண்டுள்ள பிற நகரங்களிலும் கிடைத்தலால், இவ் வேலைப்பாடு அப்பழங்காலத்தில் உயரிய நிலையில் இருந்