பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8. கணிப் பொருள்கள்

பயன்பட்டி கணிப்பொருள்கள்

மொஹெஞ்சொ-தரோவில் வாழ்ந்த பண்டை மக்கள் பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், வெள்ளீயம், காரீயம் இவற்றைப் பயன்படுத்திப்பல அணிகளும் பொருள்களும் செய்து, கொண்டனர். ஆனால், அவர்கள் மிகுதியாகப் பயன்படுத்திய உலோகங்கள் செம்பும் வெண்கலமுமே ஆகும்.அவர்கள் இரண்டு உலோகங்களைத் தக்க முறைப்படி சேர்த்துப் புதிய உலோகம் செய்யவும் அறிந்திருந்தனர்.

பொன்னும் வெள்ளியும்

பொன் சிறப்பாக நகைகட்கே பயன்பட்டது. அப்பொன்னில் சிறிதளவு வெள்ளி கலந்துள்ளது. அதனால் அப்பொன் கோலார், அனந்தப்பூர் போன்ற இடங்களிலிருந்து கொண்டு செல்லப்பட்டிருத்தல் வேண்டும் என்று அறிஞர் அறைகின்றனர். மொஹெஞ்சொ-தரோ மக்கள் பொன்னையும் வெள்ளியையும் கலந்து ‘எலக்ட்ரம்’[1] என்னும் புதிய உலோகம் ஒன்றைச் செய்யக் கற்றிருந்தனர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இப்புதிய உலோகமும் நகைகள் செய்யவே பயன் பட்டதாம். அம்மக்கள் ஈயத்திலிருந்து வெள்ளி எடுக்கக் கற்றிருந்தனர்; அங்கனம் தாம் எடுத்த வெள்ளியையே பயன்படுத்திவந்தனர் வெள்ளியைக் கொண்டு காலணிகளும் சில பாத்திர வகைகளுமே செய்து பயன்படுத்தினர்.

செம்பில் ஈயக் கலவை

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த செம்புப் பொருள் களில் ஈயக் கலவை காணப்படுகிறது. ஈயக் கலவை கொண்ட செம்புக் கனிகள் இராஜபுதனம், பாரசீகம், பலுசிஸ்தானம்


  1. Electrum.