பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

மொஹெஞ்சொ - தரோ


சிறு மழித்தற் கத்திகளும் பல கிடைத்துள்ளன. இவை முகத்தில் மட்டும் இன்றி உடலிலும் மயிர் களையப் பயன்பட்டவையாகும். இவை மிகுதியாகக் கிடைத்தலால் இவற்றை ‘இருபாலரும் பயன்படுத்தினர் போலும்!’[1] என்று டாக்டர் மக்கே கருதுகின்றார்.

உழு கருவிகள்

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த ஒருவகைக் கருவிகள் கல்லாற் செய்யப்பட்டுள்ளன. அவை 27.5 செ.மீ. நீளமும் 8.5 செ. மீ. அகலமும், 7.5 செ.மீ. உயரமும் உடையன. அவை இருபுறமும் கூராக்கப்பட்டவை. அவை அமைந்துள்ள முறையிலிருந்தும், மிக்க கனமாக இருப்பதிலிருந்தும் கலப்பைக் கருவிகளாக இருத்தல் கூடும் என்று அறிஞர் அபிப்பிராயப்படுகின்றனர். இவை போல்வன செம்பிலும் செய்யப்பட்டுள்ளன.

தூண்டில் முட்கள்

சிந்து யாறு மீன்கள் நிறைந்ததாதலின், அக்கால மக்கள் மீன் பிடிக்குந்தொழிலில் பேரார்வம் காட்டினர் என்பதைமெய்ப்பிக்கக் கணக்கற்ற தூண்டில் முட்கள் கிடைத்துள்ளன. இவை வெண்கலத்தால் இயன்றுள்ளன. வளைந்த முட்களை உடையன. இவற்றின் மேல்முனையில் நூல் நுழையத் துளை உள்ளது. அத்துளையில் உறுதியான கயிற்றை கட்டி மீன் பிடித்தனர்.

பிற கருவிகள்

மேற்கூறியவற்றுள் அடங்காத தச்சர்கள் பயன்படுத்திய கொட்டாப்புளிகள், இழைப்புளிகள் கத்திகள், துளையிடும் கருவிகள், நெசவாளர் பயன்படுத்திய கருவிகள், ஊசிகள் முதலியன பலவாகக் கிடைத்துள்ளன. துணி தைக்கும் ஊசிகள்


  1. His ‘The Indus Civilization’, p. 180