பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உணவும் உடையும்

127


உடைகள்

அப்பழைய மக்கள் எத்தகைய உடைகளை எவ்வெவ்வாறு உடுத்திருந்தனர் என்பதை இன்று உறுதிப்படுத்திக் கூறுதற்குரிய சான்றுகள் கிடைத்தில. எனினும், அவர்கள் விட்டுப்போன ஒவியங்கள், பதுமைகள், முத்திரைகள் முதலியவற்றிற் காணப்படும் விவரங்களைக் கொண்டு, அவர்கள் உடைகளை உடுத்திவந்த முறைகளையும் உடை விசேடங்களையும் ஒருவாறு உணர்தல் கூடும். சிந்து வெளியில் பருத்தி மிகுதியாகப் பயிரானதாலும், நெசவுக்குரிய கருவிகள் அங்குக் கிடைத்தமையாலும் அம்மக்கள் நூல் நூற்று ஆடைகளை நெய்து உடுத்து வந்தனர் என்பது ஐயமறத் தெரிகிறது. எளியவர் சாதாரணப் பருத்தி ஆடைகளை அணிந்திருந்தனர். செல்வர் பூ வேலைப்பாடு பொருந்திய பருத்தி ஆடைகளைப் பயன்படுத்தி வந்தனர்; சிலர் கித்தான் போன்ற முரட்டு ஆடைகளை உடுத்தினர்; சிலர் நாரால் ஆன ஆடைகளையும் உடுத்திருந்தனர்[1] மொஹெஞ்சொ-தரோவில் கண்டெடுக்கப்பட்ட வடிவம் ஒன்றில் பூ வேலைப்பாடு அமைந்த போர்வை காணப்படுகிறது. அது சிறந்த வேலைப்பாடு உடையது. அத்தகைய போர்வைகளைச் செல்வரே பயன்படுத்தி வந்தனர் எனல் தகும். அவர்கள் தம் இடக்கையும் மார்பும் மறையுமாறு போர்வை போர்த்தினராதல் வேண்டும். ஆயின், எளிய மக்கள் இடை ஆடையுடனே திருப்தி அடைந்திருந்தனரோ - எளிய விலையிற் கிடைத்த போர்வைகளை அணிந்திருத்தனரோ-தெரியவில்லை. மொஹெஞ்சொ-தரோவில் பலவகைப் பொத்தான்கள் கிடைத்தன. ஆதலின், அந்நகர மக்கள் சட்டைகளை அணிந்திருந்தனர் என்பது வெள்ளிடைமலை. கழுத்துப் பட்டைகளும் வழக்கில் இருந்தன.


  1. நாராடை மரவுரி போன்றது. இஃது அப்பழங்காலத்தில் உபயோகிக்கப்பட்டதை அறிவிப்பதற்கே போலும், இன்றைய மக்கள் நார்ப்பட்டை விசேட காலங்களில் அணிகின்றனர். PTS. Iyengar’s ‘The Stone Age in India’, p.38,