பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

மொஹெஞ்சொ - தரோ


அணங்குகளின் ஆடைச் சிறப்பு

பண்டைச் சிந்துவெளிப் பெண்மணிகள் பாவாடைகளைப் பெரிதும் பயன்படுத்தினர் என்பதை முத்திரைகளைக்கொண்டு கூறலாம். அவை முன்புறம் ஒரளவு குட்டையாகவும் பின்புறம் நீண்டும் இருந்திருக்கலாம்; நாடாக்களைக் கொண்டனவாக இருக்கலாம். பாவாடைகளை இறுக்க, மணிகள் சேர்த்துச் செய்யப் பட்ட (ஒட்டியாணம் போன்ற) அரைக்கச்சைகளை அம்மகளிர் பயன்படுத்தினர். அக்கச்சைகளுட் சில முன்புறம் முகப்பு வைக்கப் பட்டுள்ளன. செல்வர் வீட்டு மகளிர் மெல்லிய மேலாடைகளை அணிந்து வந்தனர். எளிய மகளிர் மேலாடைகளைப்பற்றி ஒன்றும் கூறக்கூடவில்லை. மொஹெஞ்சொ-தரோவில் இன்னும் தோண்டி எடுக்கப்படாத பகுதி பத்தில் ஒன்பது பங்கு. ஆதலின், இன்றுள்ள நிலைமையில் எதனையும் உறுதியாகக் கூறக் கூடவில்லை என்பது இங்கு நினைவில் இருத்தத் தக்கது.

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த களிமண் படிவங்களுள் ஆண் உருவங்கள் பெரும்பாலான ஆடை இன்றியே காண்கின்றன. பெண் உருவங்கள் அனைத்தும் ஆடையுடனே காணப்படுகின்றன. ஆகவே, இவற்றைக் கொண்டு, ‘மொஹெஞ்சொ-தரோ ஆடவர் பண்டை எகிப்தியருட் பெரும்பாலரைப் போல் ஆடையின்றியே இருந்தனர்’ எனக் கூறுதல் இயலாது என்று அறிஞர் தீக்ஷத் அறிவிக்கின்றார்.[1] இம் முடியே பொருத்தமானது.

முண்டாசு கட்டிய மகளிர்

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த பெண் வடிவங்களுட்பல, தலையில் ஒருவகை முண்டாசுடன் காணப்படுகின்றன. சில ஆண் படிவங்களிலும் இத்தகைய முண்டாசுகள் உள்ளன. இங்ஙனம் தலையில் முண்டாசு கொண்ட படிவங்கள், ஆசியா மைனரில் உள்ள அடலியா (Adalia) என்னும் இடத்திலும், டெல்-அஸ்மர் என்


  1. ‘Pre-historic Civilization of the Indus Valley’, p.26.