பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11. அணிகலன்கள்

அணிகலன்கள்

சிந்துப் பிரதேச மக்களின் உடை வகைகளை ஒவியங்கள், சிற்பங்கள் முதலியவற்றைக் கொண்டே அறிய வேண்டி இருக்கின்றன. ஆனால், அவர்கள் மகிழந்தேற்ற அணிகலன்கள் நிரம்பக் கிடைத்துள்ளமையால், அவற்றைப் பற்றித் தெளிவான உண்மைகளை உணர இடம் ஏற்பட்டுள்ளது. அம்மக்கள் பொன், வெள்ளி[1], வெண்பொன்[2], செம்பு, வெண்கலன், தந்தம், எலும்பு, மாக்கல், பலவகை இரத்தினக்கற்கள், களிமண், சங்கு முதலியவற்றைக் கொண்டு தத்தம் தகுதிக்கேற்ற அணிகளைவிதம் விதமாகச் செய்து அணிந்து வந்தனர். எளிய மக்கள் கறுப்பு-சிவப்புக் களிமண்ணால் நகைகள் செய்து சூளையிட்டு, அணிந்து வந்தனர். சிலர் ஒளிக்கற்களால் நகைகள் செய்து மெருகிட்டு, அவற்றில், வித விதமான நிறங்களைத் தீட்டி ஒளி வீசச் செய்து அணிந்துவந்தனர். செம்பு, சலவைக்கல், ஒருவகைக் கருங்கல், சங்கு எலும்பு, களிமண் இவற்றால் ஆன வளையல்கள் மிகப் பல கிடைத் துள்ளன. அவை இக்கால வடுக மகளிர் கால்களில் அணியும் வெள்ளிக் காப்புகளை ஒத்துள்ளன. மண், எலும்பு, சங்கு, சிவப்புக்கல் இவற்றால் ஆன மணிகள் பல கோக்கப்பட்டு மாலைகளாக இருக்கின்றன. அம்மணிகள் புன்னைக்காய் அளவிலிருந்து சுண்டைக்காய் அளவு வரை செய்யப்பட்டுள்ளன. அவற்றுட் சில தட்டையாகவும், சில வட்டமாகவும், சில நீளமாகவும் உள்ளன. எல்லா மணிகளும் இயன்றவரையிற் பளபளப்பாகவே காணப்படுகின்றன.


  1. வெள்ளி என்பது ஆப்கானிஸ்தானத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஈயத்திலிருந்து எடுக்கப்பட்டதாதலின், அவ்வரிய பொருளால் ஆன கலன்கள் அருகியே காணப்படுகின்றன.
  2. வெண் பொன் (Electrum) என்பது நம் நாட்டில் கிடைக்கிறது. இதில் வெள்ளியே மிகுதியாகக் கலந்திருக்கும். இதினின்றும் பொன்னைப் பிரிக்க வகை அறியாத அம்மக்கள், அப்படியே நகைகள் செய்துகொண்டனர்.